உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கரூர் நெரிசல் வழக்கில் சி.பி.ஐ., விசாரணை வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

 கரூர் நெரிசல் வழக்கில் சி.பி.ஐ., விசாரணை வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

கரூரின் வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், செப்., 27ல் நடத்திய தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்து வந்த நிலையில், மாநில அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சிலரும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் எனவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த மனு மீது பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸ் நடத்தி வந்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருந்தது. எந்த வகையிலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை குழுவை, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சென்னை உயர் நீதிமன்றம் தான் அமைத்தது. அந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிப்பதாகவும் தெரிவித்திருந்தது. மாநி ல அரசு அமைத்த ஒருநபர் ஆணைய விசாரணை சுதந்திரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டதோடு, ஒருநபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது. சிறப்பு குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்டும் வகையில், சி.பி.ஐ., விசாரணையை ரத்து செய்துவிட்டு, தமிழக போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை யை தொடர்வதற்கும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரூர் துயர சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித்சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு, கரூரில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறது. அவர்களிடம், தனியார் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும், மனு அளித்துள்ளனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை