உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகர கூட்டுறவு சங்கத்தில் இனி பயிர் கடன் கிடையாது

நகர கூட்டுறவு சங்கத்தில் இனி பயிர் கடன் கிடையாது

சென்னை : நகரமயமாக்கல் நடவடிக்கையால், நகைக்கடன், சிறு வணிகக்கடன் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக, நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன் வழங்குவது நிறுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கங்களும் பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல வகை கடன்களை வழங்குகின்றன. மாநிலம் முழுதும், 119 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், 56 சங்கங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடனை உள்ளடக்கிய வேளாண் கடன்களை வழங்கி வருகின்றன. மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முழுதும் நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது. எனவே, அதிகரித்து வரும் நகர்ப்புற தேவைகளை பூர்த்தி செய்வதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, நகர கூட்டுறவு கடன் சங்கங்களால் வழங்கப்படும் வேளாண் கடன்களின் பயனாளிகளை கண்டறிந்து, அக் கடன்களை, நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் எல்லைக்கு அருகேயுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மாற்றம் செய்ய, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், வேளாண் கடன் வழங்குவது முதன்மையான பணியாக உள்ளது. நகர கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், சிறு வணிகக்கடன், வீட்டு அடமான கடன், வீடு கட்ட மற்றும் மனை வாங்க கடன்கள் வழங்கப்படுகின்றன. சில நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், 50 - 100 ஏக்கர் என, மிகவும் குறைந்த அளவில் வேளாண் கடன்கள் வழங்கப்படுகின்றன. நகரமயமாக்கலால் வீட்டு கடன், சிறு வணிகக் கடன்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், 2024 - 25ல் அனைத்து பிரிவுகளிலும், 2,985 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டதில், வேளாண் கடனின் பங்கு, 75 கோடி ரூபாய் தான். எனவே, அந்த சங்கங்களில் வழங்கப்படும் வேளாண் கடன்கள், அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மாற்றப்படும். இம்மாற்றத்தின் போது, சங்க உறுப்பினர்களுக்கு விபரத்தை தெரிவிப்பதுடன், உரிய முறையில் தடையில்லா சான்று வழங்கும் பணிகளை மேற்கொள்ள, மண்டல இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை