10 குறுகிய துார ரயில்களில் அக்., 1 முதல் 12 பெட்டிகள்
சென்னை:குறுகிய துாரத்தில் இயக்கப்படும் 10 பயணியர் ரயில்கள், வரும் 1ம் தேதி முதல் 12 பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், அரக்கோணம் - சேலம், சேலம் - மயிலாடுதுறை உட்பட, 15க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் குறுகிய துார பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் எட்டு பெட்டிகளே இருக்கும். மாவட்டங்களை இணைக்கும் இந்த ரயில்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சிறிய கதவுகள் இருப்பதால், பயணியர் ஏறி, இறங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, 12 பெட்டிகளாக இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், அரக்கோணம் - சேலம், சேலம் - அரக்கோணம், சேலம் - மயிலாடுதுறை, மேல்மருவத்துார் - விழுப்புரம், விழுப்புரம் - மேல்மருவத்துார், கடற்கரை - திருவண்ணாமலை, திருவண்ணாமலை - சென்னை கடற்கரை உட்பட 10 ரயில்கள், அக்., 1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக மாற்றி இயக்க உள்ளோம். இவற்றில் போதிய அளவில் கழிப்பறை வசதியும் இருக்கும். பயணியருக்கான தகவல் பலகை உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இடம் மாற்றம்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள் காரணமாக, சென்னை - புதுடில்லி ஜி.டி., விரைவு ரயில் உட்பட, மூன்று ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:சென்னை சென்ட்ரல் - புதுடில்லி ஜி.டி., விரைவு ரயில், இனி எழும்பூரில் இருந்து மாலை 5:40 மணிக்கும், எழும்பூர் - காரைக்கால் விரைவு ரயில், தாம்பரத்தில் இருந்து இரவு 9:30 மணிக்கும், எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில், தாம்பரத்தில் இருந்து இரவு 11:50 மணிக்கும் புறப்படும். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த மாற்றம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.