மேலும் செய்திகள்
குடியரசு தின டில்லி அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி
7 minutes ago
மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கு நீட்டிப்பு
9 minutes ago
ரேஷன் கார்டு விண்ணப்பம்; 1.71 லட்சம் நிலுவை
13 minutes ago
- நமது நிருபர் -: அரசு அனுமதி பெறாமல், இரண்டு ஸ்டூடியோக்கள் கட்டி, முறைகேடாக வாடகை வசூலித்த புகாரில், தமிழக திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி உட்பட 10 நிர்வாகிகளிடம், தண்டத்தீர்வை வசூலிக்க, விசாரணை அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். திரைப்பட தொழிலாளர்களுக்கு, 2010ல், செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரில், 90 ஏக்கர் நிலத்தை, அரசு குத்தகைக்கு வழங்கியது. அதற்கு, 'திரைப்பட நகர்' என்று பெயர் சூட்டப்பட்டது. அதில், தயாரிப்பாளர்களுக்கு 10 ஏக்கர்; தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, 50 ஏக்கர்; சின்னத்திரை கலைஞர்களுக்கு 7 ஏக்கர்; தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 8 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. பையனுார் நிலத்தில், 15 ஏக்கர், திறந்தவெளி பொது இடத்தில், இரண்டு ஏக்கரில் மட்டும் அரசு அனுமதி பெறாமல், அப்பா ஸ்டூடியோ, அம்மா ஸ்டூடியோ என்ற பெயரில், இரண்டு ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டன. அவற்றை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருமானத்தை, தமிழக திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகம் பயன்படுத்தி உள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தவில்லை என்பதால், தமிழகம் முழுதும் கூட்டுறவு சங்கங்களின் கணக்கு வழக்குகளை, தனி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், தமிழக திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், முரளி ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு சார்பில், விசாரணை அதிகாரியாக, கூட்டுறவு சார்பதிவாளர் கதிரேசன் நியமிக்கப்பட்டார். அவரது விசாரணை அறிக்கையில், 'சங்கத்தின் நோக்கத்தை மீறி, படப்படிப்பு தள கட்டுமானப் பணி போன்ற செலவுகளுக்கு, சங்க நிதியை முறையற்ற செலவீனம் செய்து, சங்கத்திற்கு, 15 லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். இத்தொகையை, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உட்பட 10 நிர்வாகிகளிடம், தண்டத்தீர்வை நடவடிக்கை வழியே வசூலிக்கலாம்' என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நடிகர் ரஜினி நடித்த படங்களின் படப்பிடிப்பு இரண்டு ஸ்டூடியோக்களில் நடந்துள்ளது. வரவு செலவு கணக்கு, தனியாக ஒரு பெயரில், வங்கி கணக்கில் பராமரிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாமல், திறந்த வெளி பொது நிலத்தில், 2 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோக்கள் கட்டி, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி, முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும். அனுமதி பெறாமல் கட்டிய ஸ்டூடியோக்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில், கூட்டுறவு சங்கம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ***
7 minutes ago
9 minutes ago
13 minutes ago