மேலும் செய்திகள்
யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு முடிவு
2 minutes ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
2 minutes ago
சென்னை: கட்டட அனுமதியின்போது, அரசு அறிவித்த விதிகளில் இல்லாத, என்.ஓ.சி., எனப்படும் தடையின்மை சான்று கேட்கப்படுவதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்தனர். தமிழகத்தில், சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், டி.டி.சி.பி., எனும் நகர் ஊரமைப்பு துறை ஆகியவை கட்டட அனுமதி வழங்குகின்றன. இதற்கான, பொது கட்டட விதிகள் அமலில் உள்ளன. இதில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்ட, உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் அளிக்கலாம். இதன்படி, கட்டட அனுமதிக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து ஒப்புதல் பெறலாம். அதற்கு என்னென்ன சான்றிதழ்கள் தாக்கல் செய்ய வேண்டும் என, பொது கட்டட விதிகளில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு துறைக்கும் அலையாமல் இருக்க, சம்பந்தப்பட்ட துறைகள், ஆன்லைன் முறையில் தடையின்மை சான்று வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மனையின் பின்பாதியை வாங்குபவர்களுக்கு, பக்கவாட்டில் குறிப்பிட்ட அளவு நிலம், பொது பாதையாக ஒதுக்கப்படுகிறது. சில இடங்களில், இந்த பொது பாதை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்படும். சில இடங்களில், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களே அதை பராமரித்து வருவர். இதில் பின்பக்கத்து மனையை வாங்கியவர், அதில் புதிதாக வீடு அல்லது ஏற்கனவே உள்ள வீட்டை இடித்து, புதிய வீடு கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார். இதற்காக, மனையின் உரிமையாளர், கட்டட அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் அதிகாரிகள், பொது பாதையை ஒட்டிய முன்பக்கத்து மனை உரிமையாளரிடம், தடையின்மை சான்று பெற்று வருமாறு அறிவுறுத்துகின்றனர். இது குறித்து, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக பிரிவு தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது: பெரும்பாலும் இதுபோன்ற மனைகள் பிரிக்கப்பட்ட இடங்களில், பொது பாதை விஷயத்தில் முன்பக்கத்து உரிமையாளருக்கு, எவ்வித உரிமையும் இல்லை. அவருக்கு தனியாக பாதை வசதி இருக்கும் நிலையில், பின்பக்கத்து மனைக்கு செல்ல மட்டுமே, பொது பாதை பயன்படுத்தப்படும். இத்தகைய சூழலில், கட்டட அனுமதியின்போது முன்பக்கத்து மனை உரிமையாளரிடம், தடையின்மை சான்று வாங்கி வர வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இல்லையென்றால், கட்டுமான அனுமதி வழங்க மறுக்கின்றனர். அரசு உத்தரவில் இல்லாத சான்றிதழை தன்னிச்சையாக கேட்கும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிகளில் இல்லாத இதுபோன்ற தடையின்மை சான்றுகளை கேட்கக் கூடாது. அப்படி கேட்பவர்கள், அதற்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும். காரணம் இன்றி, தடையின்மை சான்று கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
2 minutes ago
2 minutes ago