சென்னை, மார்ச் 31--முறைகேடு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட, 2.5 கோடி கன அடி ஆற்று மணலை, ஒப்பந்ததாரர்கள் வழியே விற்க நீர்வளத்துறை முயற்சித்து வரும் நிலையில், அதை 'ஆன்லைன்' வழியே விற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆற்று மணல் விற்பனையில், குவாரியில் இருந்து யார்டுக்கு மணல் எடுத்து செல்லும் பணியில், ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம், கள்ளபிரான்புரம் பகுதியில் முறைகேடு நடப்பதாக, 2012, 2013ல் புகார்கள் எழுந்தன. இதில், முறைகேடுகளை தட்டிக்கேட்ட நபர்கள் மீது, ஒப்பந்ததாரர்கள் தாக்குதல் நடத்தியதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் முறைகேடுகள் நடப்பது உறுதியானதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகளை மூட உத்தரவிடப்பட்டது. அந்த சமயத்தில் யார்டுகளில் இருந்த மணல், அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில், பழையசீவரத்தில், 40,000 லோடு, கள்ளபிரான்புரத்தில், 59,000 லோடு மணல் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் எடுக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்ட மணலை, நீதிமன்ற அனுமதியுடன் விற்க, 2014ல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முடங்கியது
அரசுக்கு வர வேண்டிய ராயல்டி, வரி உள்பட, ஒரு யூனிட் அதாவது, 100 கன அடி மணல், 1,200 ரூபாய் என, விற்கப்பட்டது. லாரி உரிமையாளர்கள், பொது மக்கள் உரிய ஆவணங்கள் அளித்து, முன்பதிவு செய்து மணல் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. முதல்கட்ட விற்பனை முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட விற்பனையை துவக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, மணல் விற்பனை நடவடிக்கை அப்படியே முடங்கியது. பழையசீவரம் அருகில் வள்ளிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2.5 லட்சம் யூனிட்கள் அதாவது, 2.5 கோடி கன அடி மணல் அப்படியே உள்ளது.தமிழகம் முழுதும் மணல் குவாரிகள் செயல்படாத நிலையில், ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், விற்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள மணலை விற்றால், கட்டுமான துறைக்கு உதவியாக இருக்கும் என, நீர்வளத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஒருவருடன் இணைந்து, மணலை விற்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஆனால், ஒப்பந்ததாரர் வழியே மணலை விற்காமல், ஆன்லைன் வழியே விற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்ப்பு
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பழையசீவரம் அருகே இருப்பு வைக்கப்பட்டுள்ள, 2.5 கோடி கனஅடி மணலை விற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், ஒப்பந்ததாரர் ஒருவர் தலைமையில், சென்னையில் கடந்த, 26ம் தேதி நடந்தது.நீர்வளத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சிலர் பங்கேற்றனர். இதில், ஒரு யூனிட் மணல், 7,500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஒரு யூனிட் மணல், 5,500 ரூபாய்க்கு விற்பது என முடிவானது. ஏப்ரல் முதல் வாரத்தில், விற்பனையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2017க்கு பின் ஆற்று மணல் விற்பனை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. குவாரியில் இருந்து எடுக்கப்பட்டாலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், ஆன்லைன் முறையில் மட்டுமே விற்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே, இந்த மணலையும், மொத்த இருப்பு விபரத்தை ஆன்லைன் தளத்தில் வெளியிட்டு, முறையாக விற்பது தான் சரியாக இருக்கும். அவ்வாறு செய்தால் மட்டுமே அரசுக்கு உரிய தொகை வந்து சேரும். ஒப்பந்ததாரர் விருப்பப் படி, அவர் குறிப்பிடும் விலையில் விற்றால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மேலிடம், இதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.