உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கு ஓகே சேலம், திருச்சி தள்ளிவைப்பு; நெல்லைக்கு இல்லை

மதுரை, கோவை மெட்ரோ ரயிலுக்கு ஓகே சேலம், திருச்சி தள்ளிவைப்பு; நெல்லைக்கு இல்லை

சென்னை:மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது; சேலம், திருச்சி திட்டங்கள் தள்ளி போடப்பட்டு உள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, திருநெல்வேலி நகரம் உகந்ததாக இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் தற்போது இயக்கப்படும் 54 கி.மீ., மெட்ரோ ரயில்களில், பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை, 40ல் இருந்து 49 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயணியர் வருகையை மேலும் உயர்த்த, இணைப்பு வாகனங்களின் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இரண்டாவது கட்டமாக, மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் - சோழிங்கநல்லுார் என, மூன்று வழித்தடங்களில் 118 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை, தற்போது மாநில அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மாநில அரசு ஒப்புதலுக்கு பின், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.சென்னையை தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டு, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அறிக்கை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.திருநெல்வேலி நகரம், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உகந்தது அல்ல என, சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சேலம் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து, அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தால், அரசுக்கு நிதி சுமை அதிகமாகி உள்ளதால், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை பின்னர் தொடரலாம் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கோவையில் 34.8 கி.மீ., துாரம் 10,740.49 கோடி ரூபாயிலும், மதுரையில் 32 கி.மீ., துாரம் 11,368.35 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தலா, 50 சதவீத பங்களிப்புடன் செயல்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தற்போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ