இதே நாளில் அன்று
ஜனவரி 27, 1945திருநெல்வேலியில், சுப்பையா பிள்ளை - முத்துலட்சுமி தம்பதியின் மகனாக, 1945ல் இதே நாளில் பிறந்தவர் கண்ணன். தன் தந்தையிடம் தமிழ் கற்ற இவர், பல்கலை புதுமுக வகுப்பு வரை படித்தார். முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்டோருடன் பழகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தார். இவர், 1996ல், சேப்பாக்கம் சட்டசபை தொகுதியில், மு.கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். கம்பராமாயணம் குறித்த தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலக்கிய, ஆன்மிக மேடைகளில், தன் நாவன்மையால் கூட்டத்தை கட்டிப்போட்ட இவர், அரசியல் மேடைகளில் சர்ச்சையாக பேசி, பகைவர்களையும் சம்பாதித்தார். 'பொதிகை' தொலைக்காட்சி நடத்திய பல பட்டிமன்றங்களிலும், பொது பட்டிமன்றங்களிலும் நடுவராக பங்கேற்றார்; தமிழக அரசின், 'இளங்கோவடிகள்' விருதை பெற்றார். இவர், 'குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே, காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள், பழம்பாடல் புதுப்பாட்டு' உள்ளிட்ட கவிதை, கட்டுரை நுால்களை எழுதினார். அவை, தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவர் தன், 77வது வயதில், 2022, ஆகஸ்ட், 18ல் மறைந்தார். இலக்கிய ஆர்வலர்களால், 'தமிழ்க்கடல்' என, பாராட்டப்பட்டவரின் பிறந்த தினம் இன்று!