சென்னை : சிறிய வெங்காயம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், ஏற்றுமதியை மீண்டும் துவங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அரியலுார், பெரம்பலுார், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சிறிய வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி, 2023ம் ஆண்டு பாதித்தது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளுக்கு அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், பெரிய வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது. கிலோ 30 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகி வருகிறது. ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கும். பெரிய வெங்காயத்துடன் சிறிய வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை நீடிக்கிறது. இதனால், அதன் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில், கிலோ சிறிய வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தடை விதிப்பதற்கு முன், 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. ஏற்றுமதி தடையால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கடும் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர். எனவே, ஏற்றுமதிக்கான அனுமதியை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.