ஆன்லைன் பயிர் கடன் திட்டம்; தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இழுபறி
சென்னை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 'ஆன்லைனில்' பயிர் கடன் வழங்கும் திட்டத்தை, முறையாக செயல்படுத்தாததால், விவசாயிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. விவசாயம் மற்றும் விவசாயம் சாராத கடன்கள் வழங்குவது, இந்த சங்கங்களின் நோக்கம். கடந்த ஆண்டு, 46,000 கோடி ரூபாய் அளவிற்கு, பலவகை கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த சங்கங்களில், லட்சக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களான உள்ளனர். சாகுபடி நேரத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, ஏராளமான விவசாயிகள் பயிர் கடன் பெற்று வருகின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக, விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்தை, கடந்த ஆகஸ்ட், 1 7ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இதன் வாயிலாக வங்கிக்கு செல்லாமலே, விவசாயிகள், 'ஆன்லைனில்' விண்ணப்பித்து, ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும் . ஆனால், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை, 'ஆன்லைனில்' இணைக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதனால், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் விவசாயிகள், பயிர் கடன்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சாகுபடி நேரத்தில் பயிர் கடன் கிடைக்கும் என நம்பி, பல விவசாயிகள் ஏமாந்து போயுள்ளனர். திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வராமல், இரண்டு மாதங்களாக இழுபறியாக உள்ளது.