மின்சாரம் துண்டிக்கப்பட்ட விபரம் நுகர்வோருக்கு தெரிவிக்க உத்தரவு
சென்னை: 'வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளில், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டால், அதற்கான காரணத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்ட விபரத்தை, எஸ்.எம்.எஸ்., அல்லது 'வாட்ஸாப்' வாயிலாக நுகர்வோருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்' என, மின்வாரியத்திற்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின்வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. இதன் செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் ஆணையம், மின்வாரியத்திற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. சந்தேகம் எழுந்தால்
இதுகுறித்து, ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய மின் இணைப்பு உட்பட அனைத்து மின்சார சேவைகளுக்கும், மின்வாரிய இணையதளம் வாயிலாகவே, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எளிதில் விண்ணப்பிக்கும் வகையில், மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும்போது சந்தேகம் எழுந்தால், அதற்கான விடை தெரிய, கேள்வி பதிலுடன் கூடிய மென்பொருள் உருவாக்க வேண்டும்.தாழ்வழுத்தப் பிரிவில் இடம் பெறும் தொழிற்சாலைகளில், உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, அதற்குரிய மீட்டரை உடனே பொருத்த வேண்டும்.கட்டுமானப் பணி முடிந்ததும், தற்காலிக இணைப்பில் இருந்து, நிரந்தர வகைக்கு கட்டணம் மாற்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்.அனைத்து வகை விண்ணப்பங்களுக்கும், விண்ணப்பதாரர் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டிய, ஆவணத்தின் அதிகபட்ச அளவு போதுமானதாக இல்லை. குறைந்தது, 5 எம்.பி., அளவிற்கு அதிகரிக்க வேண்டும். கணினியில் பதிவு
மின்கட்டணம் செலுத்தாவிட்டால், மின் வினியோகம் துண்டிக்கப்படும். வீடுகளில் யாரும் இல்லாத நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட விபரம் நுகர்வோருக்கு தெரிவதில்லை. சில நாட்களுக்குப் பின், மின்கட்டணம் செலுத்தச் செல்லும்போது, அதிக அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. சில பணியாளர்கள், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக, அலுவலகக் கணினியில் பதிவு செய்கின்றனர்.ஆனால், மின் இணைப்பில், மின் வினியோகத்தை துண்டிப்பதில்லை. இதன் காரணமாகவும், நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்தும் நிலை உருவாகிறது. எனவே, மின் வினியோகம் துண்டிக்கப்படும் பட்சத்தில், அதற்கான காரணத்துடன் அந்த விபரத்தை, எஸ்.எம்.எஸ்., அல்லது, 'வாட்ஸாப்' வாயிலாக, நுகர்வோருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என, மின்வாரியத்திற்கு, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.