உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பணிக்கு சொந்த வாகனங்கள் கூடாது

தேர்தல் பணிக்கு சொந்த வாகனங்கள் கூடாது

சென்னை:தேர்தல் பணியில் சொந்த வாகனங்களை ஈடுபடுத்த அனுமதிக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம், ஆர்.டி.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினர், தேர்தல் அலுவலர்கள், பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக அரசு சார்பில் தனியாரிடம் ஒப்பந்த முறையில் வாகனங்கள் வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது, இந்த வாகனங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் மொத்தமாக ஒப்பந்த அடிப்படையில், சில மாவட்ட நிர்வாகங்கள் வாடகைக்கு எடுத்து உள்ளன. சில அதிகாரிகளின் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாக, உரிமைக் குரல் ஓட்டுனர் தொழிற்சங்க பொதுச்செயலர் ஜாஹிர் ஹுசைன் போக்குவரத்து ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.இதற்கிடையே, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம், அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தேர்தல் பணிக்காக, பெரும்பாலான மாவட்டங்களில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளன. இது, மோட்டார் வாகன சட்டங்கள் மற்றும் விதிகளை மீறுவதாகும். தேர்தல் தொடர்பான அனைத்து செயல்முறைகளுக்கும், ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.ஏதாவது விபத்து ஏற்பட்டால், சொந்த வாகனங்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் வாயிலாக காப்பீடு பெற முடியாது. எனவே, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், தேர்தல் உட்பட தேர்தல் தொடர்பான பணிகளுக்கு, சொந்த வாகனங்களை கட்டாயம் ஈடுபடுத்தக் கூடாது; வாடகை வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக புகார்கள் வரக்கூடாது. தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும், வாடகையில் இயக்கப்படும் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்பதை அனைத்து ஆர்.டி.ஓ.க்களும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ