தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பு 12.20 லட்சம் ஏக்கராக உயர்வு
சென்னை:அரசின் சிறப்பு தொகுப்பு திட்டங்களால், நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி பரப்பு 12.20 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதாக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் உரம் இருப்பு மற்றும் வினியோகம் குறித்து, உர உற்பத்தி நிறுவன நிர்வாகிகள் மற்றும் வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, இயக்குநர் முருகேஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன், துறையின் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் அவர் கூறியுள்ளதாவது: டெல்டா மாவட்டங்களில், 82.7 கோடி ரூபாய் நிதியில், குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில், முதல் முறையாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 132 கோடி ரூபாய் நிதியில், சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்தாண்டு 9.36 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்தது. தற்போது சாகுபடி பரப்பு 31 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 12.20 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உர விற்பனை நிலையங்களில், உரங்களுடன் பிற இடுபொருட்களை வாங்க, விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது. உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் சில்லரை விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, வேளாண்மை தவிர, மற்ற பயன்பாட்டிற்கு வழங்கக்கூடாது. ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்ற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்து, விற்பனை செய்யக்கூடாது. கலப்படம் மற்றும் போலி உரங்களை விற்பனை செய்தல், விதிமுறைகளை மீறி உரங்களை பதுக்கி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை முனைய கருவி வாயிலாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்கள் இருப்பு மற்றும் விலை நிலவரம் குறித்து, தகவல் பலகை வைக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டபடி, எடை சரியான அளவில் இருக்க வேண் டும். இந்த நடைமுறைகளை, உர விற்பனை நிறுவனங்கள் பின்பற்றுவதை, மாவட்ட வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.