பழனி - ஒட்டன்சத்திரம் 4 வழிச்சாலை டிசம்பருக்குள் பணியை முடிக்க கெடு
சென்னை: பழனி - ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலை பணியை, அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க, மத்திய அரசு கெடு விதித்து உள்ளது.திண்டுக்கல் - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை, பழனி வழியாக செல்கிறது. இச்சாலையில், தினமும் ஏராளமான சரக்கு மற்றும் பயணியர் வாகனங்கள் சென்று வருகின்றன. பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச விழா மற்றும் பண்டிகை காலங்களில், ஏராளமான பக்தர்கள், இச்சாலை வழியாக பாத யாத்திரை செல்கின்றனர்.இரண்டு வழிச்சாலையாக இருப்பதால், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. பாதயாத்திரை வரும் முதியோர், பெண்கள், குழந்தைகள், சாலை ஓரத்திலேயே படுத்து துாங்குகின்றனர். எனவே, இந்தச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும், தேசிய நெடுஞ்சாலை பிரிவு திட்டமிட்டது. இதற்காக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் நிதியுதவி கோரப்பட்டது.இதையடுத்து, சாலை விரிவாக்க பணிகளுடன், பாத யாத்திரை செல்லும் பக்தர்கள், பயணியர் ஓய்வெடுப்பதற்காக, 13 இடங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன், ஓய்வறை அமைக்க, 2022 அக்டோபரில், 172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, 9.50 மீட்டர் அகலமுள்ள சாலையை, 16.5 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பக்தர்கள் தங்கும் ஓய்வறைகளை, 2025 ஜனவரி தைப்பூச விழாவிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மத்திய அரசு விரும்புகிறது.எனவே, சாலை விரிவாக்கம் மற்றும் பக்தர்கள் ஓய்வறைகள் கட்டும் பணியை, காலம் தாழ்த்தாமல் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இப்பணிகளை தாமதமின்றி முடிப்பதற்கான ஏற்பாடுகளில், தனிக்கவனம் செலுத்தும்படி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு, முதல்வரின் செயலர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.