உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக உளவுத்துறை செயலிழந்து விட்டது; பழனிசாமி புகார்: முதல்வர் விளக்கம்

தமிழக உளவுத்துறை செயலிழந்து விட்டது; பழனிசாமி புகார்: முதல்வர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.சட்டசபையில் நேற்று, காவல் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நான்காண்டு தி.மு.க., ஆட்சியில், காவல்துறை செயல்பாடு கள் திருப்திகரமாக இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. வேண்டியவர்களுக்கு ஒரு மாதிரியும், வேண்டாதவர்களிடம் ஒரு மாதிரியும் காவல் துறை நடந்து கொள்கிறது.முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததை விட, நான்காண்டு தி.மு.க., ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த, 12 ஆண்டுகளில், 2024ல் தான் கொலை சம்பவங்கள் குறைவு. கொலை குற்றங்களின் தேசிய சராசரி 2.2 சதவீதம்; தமிழகத்தில் 1.1 சதவீதம். அ.தி.மு.க.. ஆட்சியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட ரவுடிகள், 1,929 பேர். தி.மு.க., ஆட்சியில் கடந்த ஆண்டு, 3,645 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். காவல் நிலைய மரணங்களும் குறைவு. பழனிசாமி முதல்வராக இருந்த நான்காண்டுகளில், 14,174 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். நான்காண்டு தி.மு.க., ஆட்சியில், 15,299 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர். எந்த வழக்காக இருந்தாலும் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பழனிசாமி: தமிழகத்தில் போதைப் பொருட்கள், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது பற்றி, இங்கே பலர் பேசினர். தமிழகம் முழுதும் சந்து கடை என்ற பெயரில், சட்டவிரோத மதுபான விற்பனை நடக்கிறது. காவல் துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. டாஸ்மாக் மதுக்கூடங்கள், அரசு நிர்ணயித்த நேரத்தை கடந்தும் இயங்குகின்றன.சென்னையில் குடியிருப்பு பகுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதை, சென்னை உயர் நீதிமன்றமே கண்டித்துள்ளது. போதைப்பொருட்கள் நடமாட்டத்தை, தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.முதல்வர்: அ.தி.மு.க., ஆட்சியில், 'குட்கா' விற்பனை நடந்தது. டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் போன்றவர்களே குட்கா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தனர். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க, தி.மு.க., அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், 57,925 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த நான்காண்டுகளில், 91,509 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்ற, 12,537 கடைகள் மூடப்பட்டன. போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. போதைப் பொருட்கள் பழக்கம் தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது.பழனிசாமி: தமிழக காவல் துறையின் உளவுப்பிரிவு, அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது. 2019ல் இலங்கையில் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இது பற்றி முன்கூட்டியே மத்திய அரசுக்கு, தமிழக உளவுப்பிரிவு சொன்னது. தி.மு.க., ஆட்சியில் உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது. எதிர்க்கட்சிகளை கண்காணிப்பது மட்டுமே, உளவுத்துறையின் வேலையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது. உளவுத்துறை விழிப்போடு செயல்பட்டால், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.விமானத்தில் பயணித்து வந்து, சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபடுகின்றனர். குற்றவாளிகள் சென்னையை ஏன் தேர்வு செய்தனர்; குற்றவாளிகளுக்கு அச்சம் இல்லாததால், சென்னைக்கு வந்து கொள்ளை அடிக்கின்றனர்.முதல்வர்: தமிழகம் அமைதியாக இருப்பதால் தான், தைரியமாக கொள்ளை அடிக்க வருகின்றனர். ஆனாலும், காவல்துறை விழிப்போடு இருந்து, குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தந்துள்ளது.பழனிசாமி: குற்றவாளிகளுக்கு தமிழகத்தை கண்டால் பயம் வர வேண்டும்.அமைச்சர் துரைமுருகன்: தி.மு.க., ஆட்சியில், சென்னையில் ரவுடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.முதல்வர்: அ.தி.மு.க., ஆட்சியில், 2020ல் டில்லியிலிருந்து இங்கு வந்து கொள்ளையடித்துச் சென்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.

அனுமதி தருவதில்லை'

சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாட்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிலை இல்லை. கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் சென்று தான் அனுமதி வாங்க வேண்டி உள்ளது. அதுபோல, மக்கள் பிரச்னைகளுக்காக ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தவும் அனுமதிப்பதில்லை.முதல்வர் ஸ்டாலின்: அனுமதிக்கப்பட்ட இடத்தில், குறித்த காலத்தில் விண்ணப்பித்தால், போராட்டங்கள், கூட்டம் நடத்த நிச்சயம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் இடங்களில் போராட்டம், கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அந்த இடங்களில் அனுமதி கேட்டால் அனுமதிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை