உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 2026ல் வெற்றி உறுதி * பழனிசாமி நம்பிக்கை

வரும் 2026ல் வெற்றி உறுதி * பழனிசாமி நம்பிக்கை

சென்னை:'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது, முதல்வர் ஸ்டாலினுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில கட்சிகள் நம் கூட்டணியில் இணைய உள்ளன. எனவே, 2026ல் நாம் ஆட்சி அமைப்பது உறுதி' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பழனிசாமி பேசியுள்ளதாவது:பூத் கமிட்டி அமைக்கும் பணி, இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. தேர்தல் வெற்றிக்கு பூத் கமிட்டி மிகவும் முக்கியம். ஒவ்வொரு பாகக் கிளையிலும், ஒன்பது நிர்வாகிகள் நியமிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்களை நியமனம் செய்து, அவர்கள் பெயர், மொபைல் போன் போன்ற விபரங்களை, 15 நாட்களுக்குள் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பா.ஜ., உடன் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். இது, முதல்வர் ஸ்டாலினுக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியை கலைக்க, பல வழிகளில் முயற்சி செய்கிறார். நாமும் சளைத்தவர்கள் அல்ல. உரிய வகையில், அதற்கு பதிலடி கொடுத்து வருகிறோம். நாம் தேர்தலில் வெற்றி பெற, கூட்டணி அமைக்கிறோம். ஆனால், அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான், பா.ஜ.,வுடன் ஏன் கூட்டணி சேருகிறீர்கள்? என கேட்டு வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் ஓட்டு வித்தியாசத்தில், 45 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மொத்தம் 1.96 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான், தி.மு.க., ஆட்சியை பிடித்தது. கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணி பெற்ற ஓட்டுகளை சேர்த்தால், தற்போதே நம் கூட்டணி, 115 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. நம் கூட்டணியில், மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன.வலுவான கூட்டணி, ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை ஆகியவை, 2026ல் நமக்கு வெற்றியை தேடி தரும். மக்களை சந்தியுங்கள்; தி.மு.க., ஆட்சியின் அவல நிலையை எடுத்துக் கூறுங்கள். இவ்வாறு, பழனிசாமி பேசியுள்ளதாக தெரிகிறது.மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்த நிலையில், இன்று மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை