தவறான தேதி கூறுகிறார் பழனிசாமி: அமைச்சர் சக்கரபாணி
தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டி நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் குறுவை சாகுபடி, ஏற்கனவே 3.10 லட்சம் ஹெக்டேராக இருந்தது; இந்தாண்டில் 6.05 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதுவரை, 9.32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில் 3.67 லட்சம் டன்னாக இருந்தது. இந்த சீசனில் இரண்டு, மூன்று மடங்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரே பிரச்னை என்னவெனில், நெல்லில் கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசிக்கு, மத்திய அரசு அனுமதி தர வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஏற்கனவே இருந்த விதிமுறைகளை மாற்றி, புதிய முறையில் மாற்ற அறிவுறுத்தப்பட்ட கடிதம், கடந்த ஜூலை 29ம் தேதி தான் கிடைத்தது. நுாறு கிலோ அரிசிக்கு, 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தான், நெல் மூட்டைகள் தேங்க காரணம். தற்போது, செறிவூட்டப்பட்ட அரிசி மாற்றும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள ஐந்து நிறுவனங்கள், அரிசியின் மாதிரியை எடுத்து, டில்லியில் உள்ள ஆய்வகத்திற்கு சென்றுள்ளன. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும், நெல் அரவை துவங்கும். ஆகஸ்ட் மாதமே அனுமதி வந்து விட்டதாக கூறும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அதற்கான ஆதாரத்தை காட்டட்டும். இவ்வாறு அவர் கூறினார்.