தே.ஜ., கூட்டணிக்கு திரும்பிய பழனிசாமி அ.தி.மு.க.,வை காப்பாற்றவே: தினகரன்
வேலுார்:''அ.தி.மு.க.,வை காக்கவே, பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறினார்.வேலுார் மாவட்டம், காட்பாடியில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வில் யாரும், பெண்களை சமமாக மதிப்பதில்லை. சட்டசபையில் ஜெயலலிதாவை அடித்து துன்புறுத்தியதில் இருந்தே இப்படித்தான் உள்ளனர். இதற்கு, வரும் சட்டசபைத் தேர்தலில் பெண்கள் சரியான பதிலடி கொடுப்பர். அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றனர். பின், அதை திரும்பப் பெறுவது போல, ஏற்கனவே இருந்த கூட்டணிக்கே வருகின்றனர். மக்களுக்காகவும் கட்சி நலனுக்காகவும் இப்படி முடிவெடுப்பது கட்டாயமாகி உள்ளது. அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணியில் இணைந்திருப்பதும் இப்படித்தான். அ.தி.மு.க.,வை அழிந்து விடாமல் காக்கவே, பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி உள்ளார். கடந்த, 3 ஆண்டுகளில் அண்ணாமலை, தி.மு.க.,வுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கினார். நீட் தேர்வு, கச்சத்தீவு, தொகுதி மறுவரை என தி.மு.க., கையில் எடுத்து விவாதப் பொருளாக்குவது, மக்களை திசைதிருப்பத்தான். சட்டசபையில் மாற்றி மாற்றி தீர்மானம் போடுவதால், எதுவும் நடக்கப் போவதில்லை என்பது தி.மு.க.,வுக்கு நன் கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.