உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறு தொழில் துவங்க ஊராட்சி அனுமதி கட்டாயம்

சிறு தொழில் துவங்க ஊராட்சி அனுமதி கட்டாயம்

சென்னை:தமிழகத்தில் புதிதாக குறுந்தொழில் துவங்க, ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது, அரசு உத்தரவாக மாறினால், அனுமதி தர வேண்டுமென்றே தாமதம் செய்யும்பட்சத்தில், குறுந்தொழில் துவக்க முடியாத நிலை ஏற்படும்.தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி உள்ளிட்ட பல பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய கடன் உள்ளிட்ட உதவிகளை செய்கின்றன. தொழில் துவங்க விரும்புவோர், அரசு சலுகைகளை பெற, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் மாவட்ட தொழில் மையம், மின் வாரியம் என, சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற வேண்டும். பலர், வீடுகளிலேயே, 'வெல்டிங், பேக்கிங்' உள்ளிட்ட குறுந்தொழில்களை துவக்கி வருகின்றனர். ஏற்கனவே, பல அரசு துறைகளின் அனுமதி பெற்று தொழில் துவங்கும் நிலையில், இனி, குறுந்தொழில் துவங்குவோர், ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு தொழில் துவங்க, பல அரசு துறைகளிடம் அனுமதி பெறப்படுகிறது. குறுந்தொழில்கள் மிக குறைந்த முதலீட்டில் துவக்கப்படுகின்றன. இதற்கும், அரசு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இந்த சூழலில், புதிதாக துவக்கப்படும் குறுந்தொழில்களில், என்னென்ன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை, ஊராட்சியில் தெரிவித்து, அனுமதி பெறும் வகையில், புதிய உத்தரவு பிறப்பிக்கும் பணி நடக்கிறது.இதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு, நான்கு துறைகள் வாயிலாக, முதல்வர் அலுவலகத்திலும் அனுமதி பெறப்பட உள்ளது. ஒரு கிராமத்தில், குறைந்த சதுர அடியில் வீடு கட்டினாலே பணத்தை எதிர்பார்த்து, ஊராட்சி தலைவர்களாக உள்ள அரசியல் கட்சியினர், அனுமதி தர தாமதம் செய்கின்றனர். இந்த சூழலில், தொழில் துவக்க அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்தால், அனுமதி அளிக்க பாரபட்சம் காட்டுவர்; பணம் எதிர்பார்ப்பர். மாற்று கட்சியினரா, என்ன ஜாதி என்றெல்லாம் பார்ப்பர். இதனால், தொழில் துவங்கி முன்னேறி செல்ல விரும்பும் புதிய தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்படுவர். புதிதாக தொழில் துவக்க யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே, ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி உத்தரவிட்டால், பலரிடமும் கடும் எதிர்ப்பு வரும். இந்த முடிவுக்கு, அரசு அனுமதி அளிக்கக் கூடாது. தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1000 ரூபாய், இலவச பஸ் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்துவதால் ஆண்டுக்கு, 28,000 கோடி ரூபாய்க்கு செலவு செய்கிறது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே, ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், அதன் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஊராட்சிக்கு, வருவாய் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், குறுந்தொழில் துவங்குவோர் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க, சில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அனுமதி பெறுவது கட்டாயம் என்பதற்கு பதில், தொழில் துவக்குவோரிடம் ஒரு முறை செலுத்தக்கூடிய கட்டணத்தை, குறைந்தளவில் வசூலிக்கலாம். இதையும், மாவட்ட தொழில் மையம் வசூலித்து, ஊராட்சியிடம் வழங்கும் வகையில், இணையதளத்தில் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால், ஊராட்சிக்கும் வருவாய் கிடைக்கும்; தொழில் துவக்குவதிலும் பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ