கடைசி கூட்டத்தில் கதறி அழுதார் ஊராட்சித் தலைவி
காரைக்குடி: காரைக்குடி அருகே நடைபெற்ற கடைசி ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களிடம் கதறி அழுது பிரியா விடை பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக நடைபெற்றது. ஊராட்சி மற்றும் யூனியன்களுக்காக நடைபெற்ற இந்த தேர்தலின் போது தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஊராட்சி மற்றும் யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவி வரும் 31ந்தேதி நிறைவு பெறுகிறது.இதையடுத்து அனைத்து ஊராட்சி மற்றும் யூனியன்களில் கடைசி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சிக்குட்பட்ட தளக்காவூர் ஊராட்சியின் கடைசி கூட்டம், அதன் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவைர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி உறுப்பினர்கள் சகாயசந்தனம்மாள், லெட்சுமணன், முருகப்பன், பூங்கோதை, அமிர்தம், காளீஸ்வரி, தமிழ்மாறன் அழகுமதி மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களிடம் கடந்த 5ஆண்டுகள் ஊராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பல்வேறு பணிகளை செய்ய காரணமான உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் கிராம மக்களுக்கும், தமிழக அரசிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என அவர் பேசியபடி, திடிரென கண்ணீர் விட்டு பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுதார். இதைபார்த்த அங்கிருந்த ஊராட்சி உறுப்பினர்களும், தூய்மை பணியாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. மேலும், கடந்த 5ஆண்டுகள் முழு ஒத்துழைப்பு வழங்கிய ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மத்தியில் ஊராட்சி தலைவர் தரையில் விழுந்து நன்றியை தெரிவித்த மற்றொரு காட்சியும் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.