உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லோக்சபா தேர்தல் வழக்கு கோர்ட்டில் பன்னீர் ஆஜர்

லோக்சபா தேர்தல் வழக்கு கோர்ட்டில் பன்னீர் ஆஜர்

சென்னை: ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தல் வழக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, ஆவணங்களை தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66,782 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், 'நவாஸ்கனி தன் வேட்பு மனுவில் உண்மை தகவல்களை மறைத்துள்ளார்; ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளார்' என, குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர் செல்வம் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான, 38 ஆவணங்களை தாக்கல் செய்தார். நவாஸ் கனி தரப்பில், 'பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த சில ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளன; முழுமையாக இல்லை' என, தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குறைபாடுகளை சரி செய்து, முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்ய பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை