உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காத்திருப்பு போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் கைது

காத்திருப்பு போராட்டம்; பகுதி நேர ஆசிரியர்கள் கைது

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 14வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, பகுதி நேர ஆசிரியர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பகுதி நேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த, 8ம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, 14வது நாளாக, 300க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., அலுவலகம் அருகே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, சென்னையில் பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

இடைநிலை ஆசிரியர்கள் 27ம் நாளாக போராட்டம்

'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 27வது நாளாக கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற, இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழக அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையின் பல்வேறு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 27ம் நாளாக, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். போலீசார் மறித்தபோது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊர்வலம் செல்ல முயன்ற, 890 பேரை, போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே,போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், உணவு, குடிநீர் போன்றவை வழங்கவில்லை எனக் கூறி, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அதற்கு போலீசார், 'உங்களுக்கு உணவு வழங்க, அரசு எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை' என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ