சட்டசபை காங்., தலைவருக்கு எதிராக கட்சி பொதுச்செயலர் போர்க்கொடி
சென்னை:'குற்ற வழக்கின் தீர்ப்பை சுமந்து கொண்டு, அதிகாரமிக்க பதவியில் இருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால், சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராஜேஷ்குமார் தானாக விலக வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் கே.ஜி ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்அவரது அறிக்கை:நீதிமன்ற ஆவணங்களின்படி, இப்போது ராஜேஷ்குமார் தண்டனை பெற்ற குற்றவாளி. சட்டசபை காங்கிரஸ் தலைவர் என்ற பொறுப்பில், அவர் தொடர்வது, காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் அழகல்ல. அதற்கு பதிலாக, மேல்முறையீடு செய்யப்படும் வழக்கில், தீர்ப்பு வரும் வரை, ராஜேஷ்குமார் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவது, ஜனநாயகத்தன்மை கொண்ட செயல்.காங்கிரஸ் கட்சி எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடியது. குற்ற வழக்கின் தீர்ப்பை சுமந்து கொண்டே, அதிகாரமிக்க பொறுப்பில் இருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இதை கருத்தில் வைத்து, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தானாகவே முன்வந்து, சட்டசபை காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நலன் கருதி, இதை நட்பின் உணர்வோடு சுட்டிக் காட்டுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.