ஏர்போர்ட்டில் தவித்த பயணியருக்கு மத்திய அமைச்சரால் கிடைத்த நிம்மதி
சென்னை:உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்து, நேற்று முன்தினம் மாலை 4:50 மும்பை செல்லும், 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில் பயணிக்க, 115 பேர் காத்திருந்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி, பயணம் ரத்து செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் இது தெரியவந்ததால், பெண்கள் மற்றும் முதியோர் தவிப்பதாக, 'எக்ஸ்' தளத்தில் ஒரு பயணி பதிவை வெளியிட்டார்.'அயோத்தியில் இருந்து மும்பைக்கு அவசரமாக செல்ல வேண்டிய சிலர் இங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை காப்பாற்றுங்கள்' என, அதில் கூறியிருந்தார். இதை பார்த்ததும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்ட பதிவில், 'உடனடியாக இந்த விஷயம் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் சொல்லப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறியிருந்தார்.அதுவரை பயணியருக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அவசர அவசரமாக விளக்கம் அளித்தது.'எங்கள் போயிங் வகை விமானத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதனால், மும்பையில் இருந்து விமானத்தை அயோதிக்கு இயக்க முடியவில்லை. 'அதில் செல்லவிருந்த 115 பேரில் 70 பேர் முழு, 'ரீபண்ட்' கேட்டுள்ளனர்; அது வழங்கப்படும். மீதமுள்ள, 45 பேர், பாதுகாப்பாக ேஹாட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, மாற்று விமானத்தில் அழைத்து செல்லப்படுவர்' என உறுதி அளித்தது. அதன்படி, 45 பேரும் வேறு விமானத்தில் மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர்.