பாஸ்போர்ட் வினியோகம்: புது உத்தரவு
சென்னை:'பாஸ்போர்ட்டை உரியவரிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்' என, மத்திய தொலை தொடர்புத் துறை, தபால் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, தலைமை தபால் அலுவலர்களுக்கு, மத்திய தொலை தொடர்பு அலுவலகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பதிவு தபாலில் அனுப்பப்படும் பாஸ்போர்ட்டை, உரியவரிடம் மட்டுமே வழங்க வேண்டும். அப்போது, அவர்களின் அடையாளம் மற்றும் முகவரியை சரி பார்க்க வேண்டும். ஒருவேளை அதை, உரியவரிடம் வழங்க முடியாவிட்டால், அந்த முகவரியில் உள்ளவர்கள் கூறும், வேறு முகவரிக்கு அனுப்பக் கூடாது. கட்டாயம், அதை, அனுப்பிய பாஸ்போர்ட் அலுவலகத்துக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இது, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவு என்பதால், இதை, அனைத்து தபால் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.