உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்ணீர் தட்டுப்பாடால் நோயாளிகள் தவிப்பு

தண்ணீர் தட்டுப்பாடால் நோயாளிகள் தவிப்பு

சென்னைசென்னையில் காவல் துறை மற்றும் குடிநீர் வாரிய துறைகளிடம் ஒத்துழைப்பு இல்லாததால், அரசு மருத்துவமனைகள், குடிசைப்பகுதிகளில் நேற்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.சென்னை கொளத்துாரில் தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, சென்னை நகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

பீக் ஹவர்ஸ்

தொடர்ந்து, 'பீக் ஹவர்ஸ்' எனப்படும், பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் செல்லும், வீடு திரும்பும் நேரங்களில், குடிநீர் லாரி உட்பட கனரக வாகனங்களுக்கு, போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர்.அதன்படி, குடிசைப் பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், காவலர் குடியிருப்புகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தண்ணீர் லாரிகள் நேற்று காலை சென்றன.அந்த லாரிகளை, போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், வாகனங்களையும் இயக்கவிடாமல் தடுத்தனர்.இதனால், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள், மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனைகள், ஓமந்துாரார், ராஜிவ்காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.தண்ணீர் தட்டுப்பாட்டால், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் துர்நாற்றத்துடன் கழிப்பறையை பயன்படுத்தியதுடன், மலம் கழிக்க முடியாமலும் அவதிக்குள்ளாகினர்.இதற்கு, இரண்டு அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே, முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தினமும் 11 கோடி லிட்டர் தண்ணீர், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக வினியோகிக்கப்படுகிறது.இதில், குடிசைப்பகுதிகள், அரசு மருத்துவமனைகள், அலுவலகங்களில், காலை 5:30 மணியில் இருந்து காலை 9:00 மணி வரை வினியோகிக்கப்படுகிறது. பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கும் வசதி குறைவு.அங்கு, தினமும் காலையில் லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்தால் மட்டுமே, அவர்களுக்கான தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.அரசு மருத்துவமனைகளில் இரவில் தண்ணீர் வழங்கினாலும், நோயாளிகள், உறவினர்கள் அதிகம் பயன்படுத்தும்போது, காலையில் தண்ணீர் தேவை உள்ளது.தற்போது குடிநீர் வாரியத்தில், 400 லாரிகள் வாயிலாக தினமும் 3,500 நடைகளில் குடிநீர் வினியோகிக்கிறது. இதில், 9,000 லிட்டர் தண்ணீர், 700 ரூபாய்; 6,000 லிட்டர் தண்ணீர் 475 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.இது போன்ற நேர கட்டுப்பாடுகளை குடிநீர் லாரிகளுக்கு விதித்தால், பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். காவல் துறை, குடிநீர் வாரிய அதிகாரிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.பொதுமக்களுக்கு குடிநீர் செல்வதை தடுத்து நிறுத்திய போலீசார், தாங்கள் வசிக்கும் காவலர் குடியிருப்புகளுக்கு தண்ணீர் கேட்டு வந்தனர். இந்நேரத்தில் தண்ணீர் தர முடியாது என மறுத்து அனுப்பி விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அபராதம் விதிப்பு

விபத்துகளை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கக்கூடியது.அதேநேரம், சேவை துறைகளில் உள்ள குடிநீர் வாரியம் உள்ளிட்டவற்றுடன் பேசி, பொதுமக்களுக்கு மற்ற சேவைகள் தடைபடாமல் இருப்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கனரக வாகனங்கள் தடையுள்ள நிலையில், அதை மீறி சென்னையில் நேற்று வலம் வந்த 120 குடிநீர் லாரிகள் உட்பட 207 கனரக வாகனங்களுக்கு, தலா 1,000 ரூபாயை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை