சென்னை: ''கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடந்து வருகிறது. பொதுவான உடன்பாடு ஏற்படும் வரை, பேச்சு நடக்கும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடனும் பேச்சு நடக்கிறது. பொதுவான உடன்பாடு ஏற்படும் வரை பேச்சு தொடரும். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், கட்சிகள் சேர வந்தால் தகவல் தெரிவிக்கப்படும். பா.ஜ., செல்வாக்கு அதிகரித்திருப்பதாக, பத்திரிகையாளர்கள் சொல்கிறீர்கள். யாருக்கு என்ன பலம் என்பதை மக்கள் உணர்த்துவர்.தி.மு.க., ஆட்சியில் மக்கள் துன்பப்படுகின்றனர்; எல்லா இடங்களிலும் போராட்டம். அரசு கண்டு கொள்ளவில்லை.தேர்தல் நேரத்தில் ஸ்டாலின், 'ஆட்சி பொறுப்பேற்றதும், அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என்றார். ஆனால், செய்யவில்லை.பா.ஜ., கூட்டணியிலிருந்து அ.தி.மு.க., விலகி விட்டது என்பதை தெளிவாகக் கூறி விட்டோம். அவர்கள் கதவு திறந்திருப்பதாக கூறினால், நான் என்ன கூற முடியும்? எங்கள் கட்சி குறித்து தான் நான் பதில் கூற முடியும். அ.தி.மு.க., கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது. கூட்டணி, தேர்தல் நேரத்தில் அமைப்பது.மறைந்த தலைவர்கள் குறித்து பிரதமர் பேசி உள்ளார். நல்லது செய்வதை பாராட்டுவது, நம் நாட்டின் கலாசாரம். தி.மு.க., ஆட்சியில், 8.33 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இண்டியா கூட்டணியில், தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாதபோது, பிரதமர் வேட்பாளரை எப்படி ஏற்பர்? அ.தி.மு.க., தமிழக உரிமைகளை பாதுகாக்க, தமிழகம் வளர்ச்சி பெற தேவையான நிதிகளை பெற, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
அ.தி.மு.க., அலுவலகத்தில் மகளிர் தின விழா
அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்க வந்த, பொதுச்செயலர் பழனிசாமிக்கு, பேண்ட் வாத்தியம், செண்டை மேளம் முழங்கக, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் அணியினர் அவர் மீது பூக்களை துாவி, பூரண கும்ப மரியாதையுடன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.கட்சி அலுவலகம் வந்த பழனிசாமி, அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதன்பின், மகளிர் அணிச் செயலரான, முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில், மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த, 76 கிலோ எடை உடைய கேக்கை வெட்டி, மகளிர் அணியினருக்கு வழங்கினார். நல உதவிகளை வழங்கினார்.அடுத்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவருக்கு மகளிர் அணி சார்பில், பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
மார்ச் 12ல் மனித சங்கிலி போராட்டம்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மேலும் கூறியதாவது:தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக காட்சி அளிக்கிறது. இது, வேதனைக்கு உரியது. கடந்த பிப்., 15ல் டில்லியில், போதைப் பொருள் பிடிபட்டதாகவும், இதில் தி.மு.க., சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வந்தன. அவரை தி.மு.க., கட்சியிலிருந்து நீக்கியது.அவர் மீது, 26 வழக்குகள் பதியப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்ட நபர், டி.ஜி.பி.,யை சந்தித்து பரிசு பெறுகிறார். முதல்வரை சந்திக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சரை சந்திக்கிறார்.உயர் காவல்துறை அதிகாரியிடம் நட்பு வைத்து, முதல்வர் குடும்பத்தோடு நெருங்கி பழகி, போதைப் பொருட்கள் கடத்தியது கண்டிக்கத்தக்கது. அவருடன் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். இச்சம்பவம் குறித்து, முதல்வர் முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.போதைப் பொருள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் விஷயமல்ல. திட்டங்களை செயல்படுத்துவதில் ஒப்பிட்டு பார்க்கலாம். போதைப் பொருள் விஷயத்தை ஒப்பிட்டு பார்த்தால், இந்த அரசு மோசமான அரசு. போதைப் பொருள் கடத்தலில், தி.மு.க., நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதால், அதை கட்டுப்படுத்த முடியாமல், தி.மு.க., அரசு திணறி வருகிறது. எனவே, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கவர்னரை சந்தித்து விரைவில் மனு அளிக்க உள்ளோம்.போதைப் பொருள் குறித்து சட்டசபையில் பேசிய பிறகும், அதை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.