சென்னை : ''இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகின்றனர். சுயநலத்திற்காக அமைத்துள்ள கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில், மக்களே 'மைனஸ்' ஆக்கி விடுவர்,'' என, தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பேசினார்.விகடன் பிரசுரம் மற்றும் 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' அமைப்பு இணைந்து,'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நுாலை தயாரித்துள்ளனர். இதன் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. நிரந்தர தீர்வு
முதல் நுாலை, நடிகர் விஜய் வெளியிட்டார். அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:பிறப்பால் அனைவரும் சமம்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசன சட்டத்தை வழங்கி பெருமை தேடித்தந்தவர் அம்பேத்கர். அவர் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், பெருமைப்படுவாரா அல்லது சந்தோஷப்படுவாரா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். அதற்காக, நியாயமாக தேர்தல் நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை.நியாயமான தேர்தல் நடந்தது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். இதற்காக, தேர்தல் ஆணையரை, ஒருமித்த கருத்து அடிப்படையில் நியமிக்க வேண்டும்.அம்பேத்கரின் பிறந்த நாள், ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை, நாட்டின் ஜனநாயக உரிமைகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இன்றைக்கு சட்டம் - ஒழுங்கு, சமூக நீதியை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதைப் பற்றி கண்டுகொள்ளாமல், மேல் இருந்து ஒரு அரசு நம்மை ஆளுகிறது. அங்கு தான் இப்படி என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது? வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். சமூக நீதியை பற்றி பேசுபவர்கள், இப்பிரச்னையில் நடவடிக்கை எடுத்த மாதிரி எனக்கு தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. இதை அம்பேத்கர் பார்த்தால், வெட்கப்பட்டு தலை குனிந்து போய் இருப்பார். பெண்கள், மனித உயிர்களுக்கு பாதுகாப்பில்லை. இதற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். தமிழக மக்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும் அரசு, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு அமைய வேண்டும். இது அமைந்துவிட்டால் போதும். ஆனால், நாள்தோறும் நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்காக, பதிவு வெளியிடுவதும், அறிக்கை விடுவதும், மழை நீரில் நின்று போட்டோ எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.இதில் கொஞ்சம் கூட, எனக்கு உடன்பாடு இல்லை. என்ன செய்வது, சம்பரதாயத்திற்காக சில நேரங்களில், நாமும் அதுபோல செய்ய வேண்டியுள்ளது. எச்சரிக்கை
மக்களின் உரிமைகளுக்காக, உணர்வுபூர்வமாக நான் இருப்பேன். மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாமல், மக்களின் அடிப்படை சமூக நீதி, பாதுகாப்பை உறுதி செய்யாமல் கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகின்றனர். இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து, நான் எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் சுயநலத்திற்காக அமைத்துள்ள உங்கள் கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில், மக்களே 'மைனஸ்' ஆக்கி விடுவர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட, அவரால் பங்கேற்க முடியாத அளவிற்கு, கூட்டணி கட்சிகள் சார்ந்து, அவருக்கு எவ்வளவு 'பிரஷர்' இருக்கும் என்பதை, என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால், அவரது மனது முழுக்க நம்முடன்தான் இருக்கிறது.இவ்வாறு விஜய் பேசினார்.