ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தேர்தல் முடிந்து, தலைவரை தேர்வு செய்ய, ஒன்றரை ஆண்டுகளானது. அதன்பிறகு ஒன்றிய கூட்டம் நடந்தது. முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்தே, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் துவங்குகிறது.எனவே, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளின் பதவி, 2026 டிசம்பரில் தான் முடிகிறது. எனவே எங்கள் பதவி காலத்தை நீட்டித்து, சிறப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்று பதவியேற்ற தினத்தில் இருந்தே ஆரம்பமாகி விடுகிறது. ''ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் நிர்வாகிகளின் பதவிக்காலம், 5 ஆண்டுகள் மட்டுமே. அதன்பின் அந்த பதவிகள் தாமாகவே காலியாகி விடும். அதனால்தான், அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன், ''மனுதாரர் வேண்டுமானால் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்,'' என்றும் அறிவுறுத்தினார்.