சென்னை: கிராமந்தோறும் புத் தொழில் திட்டத்தில், முதல் கட்டமாக இளைஞர்களிடம் கருத்து கேட்டு, சிறந்த தொழில் ஆலோசனை அடிப்படையில், 100 கிராமங்களை தேர்வு செய்ய, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இத்திட்டத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளி கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. உதவி தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கும் பலரிடம் தொழில் துவங்க ஆர்வம் உள்ளது. ஏழ்மை, முதலீடு, சரியான தொழில் ஆலோசனை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், தொழில் துவங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண்களில் சிறந்த தொழில் ஐடியா வைத்திருப்போரை கண்டறிந்து, 'ஸ்டார்ட்அப்' எனப்படும், புத் தொழில் நிறுவனம் துவங்கு வதை அரசு ஊக்குவிக்க உள்ளது. இதற்காக, 'கிராமந் தோறும் புத்தொழில்' திட்டத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது. முதல் கட்டமாக, 100 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு கிராமத்தில் ஒருவர் தேர்வானதும், அவரின் நிறுவனத்தை, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்ய, அரசு உதவும். பின், ஆரம்பகட்ட செலவுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், தமிழக புத்தொழில் ஆதார நிதி திட்டத்தில் ஆண்களுக்கு, 10 லட்சம் ரூபாய், பெண்களுக்கு, 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, சந்தை வாய்ப்பு, முதலீடு கிடைக்க ஏற்பாடு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். ஊக்குவிப்பு இதுகுறித்து சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது, 12,060 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தும் நகரங்களிலேயே உள்ளன. நகரங்களில் இருப்பது போல, அனைத்து கிராமங்களிலும் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கவே, கிராமந்தோறும் புத் தொழில் திட்டம் துவங்கப் பட்டு உள்ளது. மாவட்ட புத்தொழில் மையம் வாயிலாக, கிராமங்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. முன்னுரிமை அப்படி தேர்வு செய்தால், அந்த கிராமங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாக, தகவல்கள் வரும். இதனால், பாரபட்சமின்றி மாநிலம் முழுதும் இளைஞர்களிடம் நேரடியாக விருப்பம் கேட்டு, அதன் அடிப்படையில் சிறந்த தொழில் ஐடியாக்களின் அடிப்படையில், 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அந்த கிராமங்களில் தேர்வு செய்யப்படுவோரில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.