சென்னை: 'கூட்டுறவுச் சங்கத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து என்.எல்.சி., தொழிலாளர்களையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அதிகரிக்கும் லாபம்
இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையின் விவரம் வருமாறு; என்.எல்.சி., நிறுவனத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி., நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதற்கு அதன் செயல்பாடுகள் காரணமல்ல. மாறாக, தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதே காரணமாகும். தொழிலாளர்களின் உழைப்பை மதிக்க வேண்டிய நிர்வாகம் அதை அங்கீகரிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.தலைகீழ் நிலைமை
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மக்கள் வழங்கிய நிலங்களை ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி., நிறுவனத்தின் வருவாய், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.3,376 கோடியாகவும், லாபம் ரூ.559.42 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனிதவளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், என்.எல்.சி., நிர்வாகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. குறைந்த ஊதியம்
அதிக லாபம் ஈட்டியுள்ள நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க மறுத்து வருவது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தொழிலாளர் நல விதிகளுக்கும் எதிரானது ஆகும்.சமூகப் பாதுகாப்பு
என்.எல்.சி.,யின் பணியாளர் எண்ணிக்கை சில ஆண்டுகளுக்கு முன் 21,000 ஆக இருந்தது. அப்போது ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 3,000 மட்டும் தான். மீதமுள்ள 18,000 பேரும் நிரந்தரப் பணியாளர்கள் தான். அவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களாக இருந்தனர். அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும், ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பும் வழங்கப்பட்டன. மூன்றில் ஒரு பங்கு
ஆனால், காலப்போக்கில் தனது கடமைகள் அனைத்தையும் என்.எல்.சி., காற்றில் பறக்கவிட்டு விட்டது. இன்றைய சூழலில் என்.எல்.சி.,யின் பணியாளர் எண்ணிக்கை 16 ஆயிரமாக குறைந்து விட்டது. 5,000 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 5000 பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரமாக, மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. அதேநேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்திலிருந்து மும்மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.பணி நிரந்தரம்
ஒப்பந்தத் தொழிலாளராக பணியில் சேரும் ஒருவர் 15 ஆண்டுக்கும் மேல் பணி செய்த பிறகு தான் இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர முடிகிறது. அதன்பின் 10 ஆண்டு பணி செய்தால் கூட அவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைப்பதில்லை. அதனால், ஒப்பந்தத் தொழிலாளராக பணியில் சேரும் பலர் 25 ஆண்டுக்கும் மேலாக பணி செய்தும் கூட ஒப்பந்தத் தொழிலாளராகவே ஓய்வு பெறும் அவலநிலை நிலவுகிறது.நடவடிக்கை அவசியம்
இந்த நிலைக்கு முடிவு கட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக இன்ட்கோசர்வ் என்ற கூட்டுறவு சங்கத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு சங்கத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.