உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு அறிவிப்பு: எஸ்.ஐ., பணிக்கு தேர்வானவர்கள் போர்க்கொடி

போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு அறிவிப்பு: எஸ்.ஐ., பணிக்கு தேர்வானவர்கள் போர்க்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு தேர்வானவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், பணி நியமன ஆணை வழங்காத நிலையில், சீருடை பணியாளர் தேர்வு வாரியம், புதிதாக 3,644 போலீசாரை தேர்வு செய்ய, அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்கள், எஸ்.ஐ.,க்களை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்து வருகிறது. கடந்த, 2023ல், எஸ்.ஐ.,கள் 621 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. எழுத்து, உடல் தகுதி, நேர்முக தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், காவல், சிறை, தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 3,644 பேரை, தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே எஸ்.ஐ., தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், இடஒதுக்கீடு முறையில் குளறுபடி நடந்துள்ளது. பொதுப்பிரிவில் வரும், 31 சதவீத இடங்களுக்கு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும். அதில், தேர்வர்களின் ஜாதியை பார்க்கக்கூடாது. ஆனால், வாரியம் வெளியிட்ட பட்டியலில், அதிக மதிப்பெண்கள் எடுத்த பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் ஆதிதிராவிட சமூகத்தினருக்கான, இட ஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால், அந்த சமூகத்தை சேர்ந்த ஆறு பேர், போலீஸ் எஸ்.ஐ.,யாகும் வாய்ப்பை இழந்தனர். இதுபோன்ற குளறுபடிகள் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக, பணி நியமன ஆணை கிடைக்காமல் தேர்வானவர்கள் காத்து கிடக்கின்றனர். தற்போதும் வாரியம், 3,644 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு நீதி வழங்காமல், புதிதாக தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது. நாங்கள் புதிய அறிவிப்புக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி