வழி தவறும் சிறார்களை கண்டறிய 13 கேள்விகளுடன் போலீசார் சர்வே
சென்னை: தமிழகத்தில், வழி தவறி செல்லும் சிறார்களை கண்டறிய, 13 கேள்விகளுடன், போலீசார் 'சர்வே' எடுத்து வருகின்றனர். தற்போது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலின் நுழைவாயிலாக தமிழகம் மாறி விட்டது. குறிப்பாக, 17 வயதுக்கு உட்பட்ட சிறார்களிடமும், கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த, 27ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில், ஒடிஷாவை சேர்ந்த சூராஜ் என்பவரை, நான்கு சிறார்கள் அரிவாளால் வெட்டினர். அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில், 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் இதைத் தொடர்ந்து, தமிழக போலீசார், வழி தவறும் சிறார்களை அடையாளம் காணும் பணியை துவக்கி உள்ளனர். ரோந்து போலீசாரிடம், 13 கேள்விகள் அடங்கிய குறிப்பு புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது. போலீசார் ரோந்து செல்லும் இடங்களில், வழி தவறிய சிறார்களை கண்டால், அவர்களின் பெற்றோரை சந்தித்து, 13 கேள்விகளுக்கு பதில் பெறுகின்றனர். அதன் வழியாக, அந்த சிறார்களின் குணநலன்களை அறிந்து, அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து, அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ரோந்து போலீசார், வழி தவறிய சிறார்கள் என தெரிய வந்தால், அவர்களின் பெற்றோரை சந்தித்து, 13 கேள்விகளை கேட்பர். சிறார்கள் வித்தியாசமான நடத்தையுடன் உள்ளனரா; அறைக்கதவுகளை மூடி வைத்துக் கொள்கின்றனரா; உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து, மொபைல் போன் அழைப்பு வந்தால், விலகிச் சென்று பேசுகின்றனரா; முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனரா; நீண்ட காலமாக பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இயல்பாக பேசுவதை தவிர்த்து வருகின்றனரா என்ற கேள்விகளை கேட்பர். ஒத்துழைப்பு மேலும், வழக்கத்திற்கு மாறாக அதிக பணம் கேட்கின்றனரா, இரவு தாமதமாக வீட்டிற்கு வருகின்றனரா, மது அருந்துகின்றனரா, புதிதாக வாங்கிய பொருட்களை மறைக்கின்றனரா, அவர்களுடன் பழகுவார் யார் என்ற விபரங்களையும் கேட்பர். பெற்றோர் தரும் தகவல் அடிப்படையில், அவர்களின் குழந்தைகள் வழி தவறி சென்றால், அவர்களை பெற்றோர் ஒத்துழைப்புடன் சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.