உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிச., 17 முதல் வேலை நிறுத்தம் துறைமுக ஊழியர்கள் அறிவிப்பு

டிச., 17 முதல் வேலை நிறுத்தம் துறைமுக ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை:''புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த தவறினால், துறைமுக ஊழியர்கள் டிச., 17 முதல் நாடு முழுதும், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்,'' என, இந்திய நீர்வழிப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலர் நரேந்திர ராவ் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:மும்பை, சென்னை, துாத்துக்குடி, கோல்கட்டா, கோவா, கொச்சி உட்பட 12 துறைமுகங்களில், அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என, 20,000 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தம், 31 மாதங்களாக செயல்படுத்தப்படவில்லை.வேலை நிறுத்த போராட்ட அறிவிப்புக்கு பின், சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட ஐந்து தொழிற்சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி, ஆக., 28ம் தேதி, புதிய ஒப்பந்தத்தை உறுதி செய்தது. இதன்படி துறைமுக ஊழியர்களுக்கு, 8.5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்தை இதுவரை அமல்படுத்தவில்லை. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் பலமுறை வலியுறுத்தியும், ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல், தாமதம் செய்து வருகிறது. எனவே, அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துஉள்ளோம். டிச., 5ம் தேதி அனைத்து துறைமுகங்களிலும் ஊழியர்கள் கருப்பு, 'பேட்ஜ்' அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர். டிச., 10ம் தேதி நாடு முழுதும் உள்ள, 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களும், அனைத்து துறைமுகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவர். கோரிக்கையை ஏற்காவிட்டால், டிச., 17 முதல் நாடு முழுதும், அனைத்து துறைமுகங்களிலும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி