மத்திய சிறைகளில் கோழிப்பண்ணை
சென்னை:சென்னை புழல் உட்பட, ஒன்பது மத்திய சிறைகளில் கோழி பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள், 150 கிராம் சிக்கன் வழங்கப்படுகிறது. இதற்காக, கறிக்கோழிகள் வெளியில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. தற்போது, சென்னை புழல், கடலுார், மதுரை, திருச்சி உட்பட, ஒன்பது மத்திய சிறைகளில் கைதிகள் பராமரிக்கும் வகையில், கோழிப் பண்ணைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.வேலுார் மத்திய சிறையில், கோழிப்பண்ணை பயன்பாட்டுக்கு வந்து விட்டது. கடந்த வாரம், வேலுார் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறைக்கு, 300 கிலோ சிக்கன் வழங்கப்பட்டு உள்ளது.சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோழி வளர்ப்பு குறித்து, கைதிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களை நல்வழிப்படுத்தவும், வருமானத்தை ஈட்டித் தரவும், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு போக, பொது மக்களுக்காக சிறை சந்தைகளிலும் கோழிக்கறி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.