திரிசூலம் : விசாகப்பட்டணம் செல்வதற்காக, கவர்னர் ரோசையா சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்கியிருந்தபோது, மின் தடை ஏற்பட்டது. இதை, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், ஒரு மணி நேரம், கவர்னர் அவதிப்பட நேர்ந்தது. சென்னை விமான நிலையத்தின், பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், விமான நிலைய கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், ஒட்டுமொத்த கழிப்பறைக் கழிவுகளும் பெருக்கெடுத்து, உள்நாட்டு முனைய வளாகத்தில் ஓடியது. இதனால், விமானப் பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் பெரும் அவதிக்குள்ளாயினர். இயந்திரங்கள் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டும், நாற்றம் பல மணி நேரங்களுக்கு நீடித்து, அவதிப்படுத்தியது. விமான நிலைய குளிர்சாதனக் கருவியும், அடிக்கடி பழுதாகி விடுவதால், பயணிகள் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். சென்னை விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் அலட்சியத்தால், நேற்று கவர்னர் ரோசையா, மின் தடையில் சிக்கி அவதிப்பட நேர்ந்தது. விசாகப்பட்டணம் செல்வதற்காக, கவர்னர் ரோசையா, நேற்று காலை 9.45 மணிக்கு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் புறப்பட வேண்டிய விமானம் கால தாமதமானதால், பழைய விமான நிலையத்தில் உள்ள பிரமுகர்களுக்கான ஓய்வறையில் (லவுன்ச்), கவர்னர் அமர்ந்திருந்தார். கவர்னர் அறைக்குள் வந்த சில நிமிடங்களில், மின் தடை ஏற்பட்டது. இதனால், குளிர்சாதனப் பெட்டிகளும், மின் விசிறிகளும் இயங்கவில்லை. பழைய விமான நிலையத்தில், அதிகத் திறன் கொண்ட மூன்று ஜெனரேட்டர்கள் உள்ளன. இவற்றை இயக்கியிருந்தால், மின் வினியோகம் சீராகியிருக்கும். ஆனால், விமான நிலைய ஆணைய அதிகாரிகள், ஜெனரேட்டர்களை இயக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கவர்னர் பயணம் செய்ய வேண்டிய விமானம், காலை 10.50 மணிக்கு, தாமதமாகப் புறப்பட்டது. அவர் புறப்படும் வரை, ஓய்வறையில் மின் வினியோகம் சீர் செய்யப்படவில்லை.