ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.531 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு ராமர் அவதார நாளான 'ராமநவமி' திருநாளில் இன்று(ஏப்.,6) பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்காக பாலத்தை திறந்து வைக்கிறார்.அந்தகாலத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை தரிசிக்க பக்தர்கள், சாதுக்கள் பாம்பன் கடலில் பரிசல் மூலம் கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் விஜயரகுநாத சேதுபதி பரிசலுக்கு கட்டணம் வசூலிக்காமல் சேவை செய்தார்.பரிசல் பயணம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். பின் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பாம்பன் கடலில் ரயில் பாலம் அமைத்து இலங்கைக்கு வணிகத் தொடர்பை ஏற்படுத்த திட்டமிட்டனர்.அதன்படி 1911ல் பாம்பன் கடலில் ரயில் பாலம் கட்டுமானத்தை துவக்கிய ஆங்கிலேயர்கள் 1914 பிப்., 24ல் ரயில் போக்குவரத்தை துவக்கினர். ஜெர்மன் நாட்டுப் பொறியாளர் ஜெர்ஷர் இப்பாலம் நடுவில் 'டபுள்லீப் கேண்ட் லீவர்' முறையில் துாக்கு பாலம் வடிவமைத்து பொருத்தியதே பாம்பன் பாலத்தின் சிறப்பம்சம்.இரு பகுதியாக உள்ள துாக்கு பாலத்தை ரயில்வே ஊழியர்கள் பாலத்தின் மேல்தளத்தில் நின்றபடி பெரும் சிரமத்துடன் திறந்து மூடினர். இதனை ஒருமுறை திறந்து மூட 30 நிமிடங்கள் ஆனது. சரக்கு கப்பல்கள், பாதுகாப்பு படை கப்பல்கள் இலங்கை வழியாக சுற்றிச் செல்வதை தவிர்த்து 1914 முதல் பாம்பன் துாக்கு பாலத்தை கடந்து சென்னை, துாத்துக்குடி, கேரளா, ஆந்திரா துறைமுகங்களுக்கு சென்றன. யார் கண் பட்டதோ...
இந்தியாவில் கடல் மீது அமைந்த முதல் ரயில் பாலம் என்ற பெருமை பாம்பன் பாலத்திற்கு உண்டு. 1914 முதல் சென்னை டூ தனுஷ்கோடி வரை 'போர்ட் மெயில்' எனும் ரயில் இயக்கப்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி நகருக்கு பேரிடியாக 1964 டிச., 22 நள்ளிரவில் ஏற்பட்ட புயல் தனுஷ்கோடியை புரட்டி போட்டது.இப்புயல் பாம்பன் ரயில் பாலத்தையும் சின்னாபின்னமாக்கியது. இதுதான் பாம்பன் பாலத்திற்கு விழுந்த முதல் அடி. இந்த பாலத்தை நம் ரயில்வே பொறியாளர்களைக் கொண்ட வல்லுநர்கள் 70 நாட்களுக்கு பின் சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கி சாதனை படைத்தனர். ஆனால் அன்று முதல் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.இதன்பின் 2வது அடியாக 2014 ஜன.,13ல் பாலத்தின் 121வது துாண் மீது இந்திய கடற்படை கப்பல் மோதி சேதப்படுத்தியது. இதனை 8 நாட்களில் ரயில்வே பொறியாளர்கள் சரிசெய்து மீண்டும் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை துவக்கினர். 2019 டிச.,3ல் துாக்கு பாலத்தின் இரும்பு பிளேட் சேதமடைந்ததால் 82 நாட்கள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இது பாம்பன் ரயில் பாலம் வரலாற்றில் 3 முறையாக விழுந்த அடி. இறுதியாக 2022 டிச., 23ல் மீண்டும் துாக்குப் பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்தது. ஆய்வு செய்த ரயில்வே பொறியாளர்கள் குழு, துாக்கு பாலம் பலமிழந்ததால் இனிமேல் பாலத்தில் போக்குவரத்தை நடத்த முடியாது. துாக்கு பாலத்தை புதுப்பித்து மீண்டும் போக்குவரத்தை துவக்கினால் பயணிகளுக்கு விபரீதம் ஏற்படக் கூடும் என எச்சரித்தனர். இதுதான் பாம்பன் பாலத்திற்கு முடிவுரையாக அமைந்தது. அன்று முதல் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்தானது. சுதந்திர இந்தியாவின் புதிய மைல் கல்
இதற்கு முன்னதாக பாம்பன் பாலம் பலமிழந்து வருவதை அறிந்த ரயில்வே அமைச்சகம் பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு சென்றது. உடனே புதிய பாலம் கட்ட உத்தரவிட்டார். 2019 மார்ச் 1ல் புதிய பாலத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2020ல் புதிய பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.கொரோனா ஊரடங்கு தடையால் கட்டுமானப்பணிகள் தள்ளிப்போனது. இறுதியாக 2024 நவம்பரில் ரூ.531 கோடியில் புதிய பாலம் கட்டுமானப் பணி முழுமை பெற்றது. இதனை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி சில குறைகளை சுட்டிக்காட்டினார்.இக்குறையை டிச.,15க்குள் ரயில்வே பொறியாளர்கள் சரி செய்து பாலத்தில் பல கட்டமாக ரயில் இன்ஜின் மற்றும் சரக்கு பெட்டிகள், பயணிகள் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தி பாலத்தின் திறன் குறித்து 100 சதவீதம் உறுதிப்படுத்தினர்.மக்கள் தேவையை உணர்ந்த பிரதமர் மோடி முயற்சியில், ஆங்கிலேயருக்கு பின் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதுமையான பிரம்மாண்ட ரயில் பாலம் சுதந்திர இந்தியாவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய மைல் கல். வயசு 111
உப்புக் காற்று, புயல், மழை, வெயில் பாராமல் 1914 முதல் 2022 வரை 108 ஆண்டுகளாக ஓய்வறியாமல் பாம்பன் கடலில் கம்பீரமாக நின்று களமாடிய ரயில் பாலம் பலகோடி மக்களை பாதுகாப்புடன் பயணிக்க செய்த சுமைதாங்கி.ராமேஸ்வரம் தீவு மக்களின் அடையாள சின்னமாக விளங்கிய பாம்பன் ரயில் பாலம் இன்று வரை தீவு மக்களின் சுபநிகழ்ச்சி பத்திரிகை, போஸ்டர்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களின் சுவரில் ஒட்டி நிற்கும் சித்திரமாகவும், டிஜிட்டல் படமாகவும் வலம் வருகிறது.மக்கள் சேவையில் இருந்து இரு ஆண்டுகளாக ஓய்வு பெற்றாலும் இன்று வரை, 111 வயதை கடந்து சுற்றுலா பயணிகளுக்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த பாலம்.இப்பாலத்தின் அடையாளச் சின்னமாக உள்ள 270 அடி நீளம், 228 டன் எடை கொண்ட துாக்கு பாலத்தை முடக்கி விடாமல், அதனை அகற்றி, வரும் தலைமுறையினர் அறிய மண்டபம் அல்லது பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வைத்து பராமரித்து பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.மக்கள் தேவையை உணர்ந்த பிரதமர் மோடி முயற்சியில், ஆங்கிலேயருக்கு பின் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதுமையான பிரம்மாண்ட ரயில் பாலம் சுதந்திர இந்தியாவின் சாதனை வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்.
துாக்கு பாலம்
புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன.இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன. இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர்.இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும்.இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம்.துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும். இதுபோல் முந்தைய துாக்கு பாலத்தில் படகுகள் கடந்து செல்ல முடியாது.
அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது
புதிய துாக்கு பாலம் ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது.துாக்கு பாலத்தில் அனிமோ மீட்டர் கருவி பொருத்தி உள்ளதால், மணிக்கு 55 கி.மீ.,க்கு மேல் சூறைக் காற்று வீசினால் இக்கருவி தானியங்கியாக செயல்பட்டு ரெட் சிக்னல் காட்டும். இதனால் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை விதிக்கப்படும். துாக்கு பாலத்தை திறந்து மூட புதிய பாலம் கிழக்கு நுழைவில் 700 கிலோ வாட் திறன் கொண்ட தனி டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின் தடை ஏற்பட்டால் 650 கிலோ வாட் திறன் கொண்ட இரு ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படும். இந்த ஜெனரேட்டர்கள் துாக்கு பாலம் அருகில் உள்ள பாலம் ஆப்பரேட்டர் அறை அருகில் உள்ளது.புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது.
கியாரன்டி
உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர். 35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது என பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும் பூசப்படவில்லை.நமது நிருபர் குழு