வரி ஏய்ப்பு குற்றம் தனியார் நிறுவன இயக்குநர்களுக்கு சிறை
சென்னை:போலி பில்களை தாக்கல் செய்து, வரி ஏய்ப்பு செய்த இருவருக்கு, நான்கு மாத சிறை தண்டனை விதித்து, எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் செயல்படும் 'சர்மா அலாய்ஸ்' நிறுவனம், இரும்பு, எக்கு உற்பத்தியில் ஈடுபடுகிறது. இந்நிறுவன இயக்குநர்கள் பன்வர்லால் சர்மா, சந்தன் சர்மா ஆகியோர், வருமானத்தை குறைத்துக் காண்பிப்பதற்காக, இயந்திரங்கள் வாங்கியதற்கான போலி பில்களை, வருமான வரித்துறையில் தாக்கல் செய்தனர். மேலும், இயந்திரங்கள் தேய்மானம் குறித்து காண்பித்து, வரி ஏய்ப்பு செய்ததும் வருமான வரித்துறைக்கு தெரியவந்தது. வருமான வரித்துறை, அந்நிறுவன கணக்குகளை சரிபார்த்தபோது, எந்த உற்பத்தியும் செய்யவில்லை; இயந்திரமும் வாங்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், இயந்திரம் தேய்மானம் குறித்து தாக்கல் செய்த கணக்குகளும் தவறானவை என, கண்டறியப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி பி.வித்யா, குற்றம்சாட்டப்பட்ட அந்த நிறுவன இயக்குநர்கள் இருவருக்கும் தலா, நான்கு மாத சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.