உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை * பழனிசாமிக்கு தி.மு.க., பதில்

தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை * பழனிசாமிக்கு தி.மு.க., பதில்

சென்னை:''தனிப்பட்ட கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை என்பதை, பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்,'' என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.அவர் அளித்த பேட்டி:கடந்த, 2018ம் ஆண்டு, நெடுஞ்சாலை துறையில், 4,800 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தது தொடர்பாக, தி.மு.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தான் வழக்கு தொடுத்தேன். நாங்கள் சி.பி.ஐ., விசாரணை கோரவில்லை. நீதிமன்றம், இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தடை பெற்றார். இதில், சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என பழனிசாமி கேட்டபோது, நாங்கள் ஆட்சேபனை இல்லை எனக் கூறினோம். ஆனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, 'தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லக்கூடாது' என, பழனிசாமி மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்தார். கலெக்டர் மாற்றம், எஸ்.பி., சஸ்பெண்ட், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது என, அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்தன. ஆனால், பழனிசாமி யோக்கியரை போல, 'இந்த வழக்கில் மேல்முறையீடு செல்லக்கூடாது' என்கிறார். சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாக, அபாண்டமாக பழி சுமத்துகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் நடக்காத கொலை சம்பவங்களா? மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் காமராஜ், சென்னையில் கொலை செய்யப்பட்டார். இதே போல எத்தனையோ கொலைகள், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்துள்ளன.ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கும் கொலைகளுக்கெல்லாம் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என புகார் பட்டியல் வாசிக்கிறார். முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக நடக்கும் கொலைகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை என்பதை, பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும். ஓசூரில் வக்கீல் மீதான தாக்குதல், தஞ்சையில் ஆசிரியை கொலை இரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை. இதை நன்கு அறிந்த பின்பும், தி.மு.க., அரசு மீது எதையாவது குறையாக சொல்ல வேண்டும் என்பதற்காக, அபாண்டம் சுமத்துவதை வாடிக்கையாக்கி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி