திருச்சி: திருச்சியில், காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்து, 10 ரூபாய் பெற்று கொள்ளும் திட்டம், இன்று முதல், அமல்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை வாங்கி, மது அருந்திய பின், விளை நிலங்கள், சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். இதனால், விலங்குகள், மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், இன்று முதல், திருச்சி மாவட்ட சில்லரை மதுபானம் விற்பனை கடைகளில், காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால், 10 ரூபாய் கொடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது, என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை திருச்சியில் நடைமுறைப்படுத்துவதற்கு, டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி, டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலகத்தை, நேற்று, டாஸ்மாக் பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பணியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, வேலை பளு அதிகம் இருப்பதால், காலி பாட்டில்களை திரும்ப பெற முடியாது.- தனியார் நிறுவனத்திடம் ஆட்கள் பெற்று, அந்த பணியை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.