| ADDED : டிச 31, 2025 07:16 AM
சென்னை: உழவர் தொடர்பு அலுவலர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்டக்கலை துறையினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வேளாண் துறை வாயிலாக, உழவர் நல தொடர்பு அலுவலர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நான்கு கிராமங்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலரை நியமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு தோட்டக்கலை துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசாணை வெளியிடப்பட்டு விட்டதால், திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என, வேளாண் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் நேற்று, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து, தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தரப்பில், சங்க நிர்வாகிகளிடம் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் சென்ற போது, அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். இதனால், தோட்டக்கலைத் துறை அலுவலர் சங்க பிரதிநிதிகள் ஏமாற்றம் அடைந்தனர்.