சென்னை: 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்போர் விபரங்களை வெளியிடக்கூடாது' என, பொது தகவல் அலுவலர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய -- மாநில அரசு துறைகள் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கேள்விகள் அனுப்பி தகவல் பெறுகின்றனர். அச்சுறுத்தல் இவ்வாறு கேள்வி கேட்போரின் விபரங்கள், இணையதளங்களில் அல்லது ரகசியமாக வெளியிடப்படுகின்றன. இதனால், தகவல் கோரும் நபர்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுகுறித்து, மாநில அரசுக்கும், மாநில தகவல் ஆணையத்திற்கும் ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக, பொது தகவல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அரசு வழங்கி உள்ளது. இது தொடர்பாக, மனிதவள மேலாண்மைத் துறை, அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்பவரிடம், அவரை தொடர்பு கொள்வதற்காக தேவைப்படும் விபரங்கள் தவிர, தனிப்பட்ட மற்ற விபரங்களை அளிக்குமாறு கேட்கக்கூடாது. புகார்கள் பொது அதிகார அமைப்பின் இணையதளத்தில், விண்ணப்பதாரர்களின் பெயர், பதவி, முகவரி, இ - மெயில் முகவரி, தொலைபேசி, மொபைல் எண் போன்றவற்றை வெளியிடக்கூடாது. விண்ணப்பதாரர்களின் அடையாளங்கள், பொதுவெளியில் வெளியிடப்படுவதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வருகின்றன. அவற்றை தவிர்க்க, அரசு அறிவுறுத்தல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக தகவல் ஆணையத்திற்கு புகார்கள் வராத வகையில், அரசின் பொது தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.