முன்செல்கிறது புன்செய்புளியம்பட்டி பின்தொடருமா பிற பகுதிகள்? ரூ.100 செலுத்தினால் குடிநீர் இணைப்பு
புன்செய்புளியம்பட்டி: புஞ்செய்புளியம்பட்டியில், '100 ரூபாய் செலுத்தினால், உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், 'அம்ருத் - 2.0' திட்டத்தில், குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடக்கின்றன. இத்திட்டத்தில் அனைத்து வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களுக்கும், புதிய குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். இதன்படி வீட்டு குடிநீர் இணைப்புக்கு டிபாசிட் தொகை, 4,000 ரூபாய்; வணிக குடிநீர் இணைப்புக்கு, 7,000 ரூபாய்.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், 100 ரூபாய் முன்பணமாக, நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, புதிய இணைப்பை உறுதி செய்து கொள்ளலாம்.மீதி தொகையை குடிநீர் கட்டணம் செலுத்தும் போது தவணை முறையில் செலுத்தலாம். அதாவது, 10 மாதத்தில் செலுத்திக் கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.எனினும், டிபாசிட் முழு தொகையை செலுத்தியும் குடிநீர் இணைப்பு பெறலாம்.புதிய குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர், வீட்டு பத்திரம் அல்லது பட்டா நகல், வரி ரசீது நகல் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'பரீட்சார்த்த முறையில், பு.புளியம்பட்டி நகராட்சியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்' என, நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.