தொழில் அதிபர் கம்பெனியில் ரெய்டு
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சென்னை அம்பத்துாரில் உள்ள, 'பிஸ்வேஸ்வர் லால் ஸ்டீல் கம்பெனி' மற்றும் அதன் உரிமையாளர் வீடு, கிடங்குகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியை சேர்ந்தவர் அருண் குப்தா. இவர், அம்பத்துார் தொழிற்பேட்டையில், பிஸ்வேஸ்வர் லால் ஸ்டீல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் வாயிலாக, சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், பிஸ்வேஸ்வர் லால் ஸ்டீல் நிறுவனத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்நிறுவனத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில், கடப்பாக்கம், விச்சூர் மற்றும் ஆண்டார்குப்பத்தில் கிடங்குகள் உள்ளன. அங்கேயும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில், அருண் குப்தா வீட்டிலும் நான்கு பேர் அடங்கிய அமலாக்கத் துறை குழுவினர் சோதனை நடத்தினர். கடந்த ஓராண்டாக, ஸ்டீல் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நிறுவன அதிபராகவும், வினியோகஸ்தராகவும் அருண் குப்தா இருந்துள்ளார். அதன் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில், அவர் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.