ரயில் நிலையங்களில் குற்றங்கள் நடக்க அருகில் உள்ள மது கடைகளே காரணம் ரயில்வே பாதுகாப்பு படை புகார்
சென்னை:ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் திருட்டு, பாலியல் குற்றங்களுக்கு, அவற்றின் அருகில் உள்ள மதுக் கடைகளே காரணமாக இருப்பதாக, ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.ரயில் பயணியரிடம் திருட்டு, பெண் பயணியருக்கு பாலியல் வன்கொடுமை, ரயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றங்களுக்கு, அருகில் உள்ள மதுக் கடைகளும் காரணமாக இருக்கின்றன.சென்னை கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, கொருக்குப்பேட்டை, அம்பத்துார், சைதாப்பேட்டை, ஊரப்பாக்கம், ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, விண்ணமங்கலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திண்டிவனம் உட்பட, 60க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் அருகில், டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் மது குடித்து விட்டு, ரயில் நிலையங்களுக்குள் நுழையும் போதை ஆசாமிகள், பயணியரிடம் மொபைல் போன், நகை திருடுவது, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து, பெண் பயணியர் சிலர் கூறியதாவது: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இரவு 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ரயில் நிலையங்களின் அருகில் அமர்ந்து மது குடிக்கின்றனர். மது போதையில் சிலர், பயணியரிடம் சில்மிஷம் செய்கின்றனர்; அருகில் வந்து ஆபாசமாக பேசுகின்றனர். ஏதாவது, ஒரு குற்ற சம்பவம் நடந்தால் மட்டுமே, அடுத்த ஒரு வாரத்துக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. அதன்பின், போலீசையே அங்கு பார்க்க முடியாது. போதிய போலீசாரை நியமித்து, ரயில் நிலையங்களில் நிரந்தர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுபோல், உள்ளூர் போலீசாரையும், ரயில் நிலையங்களின் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருப்பதால், ரயில்கள், ரயில் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ரயிலில் அடிபட்டு இறந்தவர்களில் பலர், போதை ஆசாமிகளாக தான் இருக்கின்றனர். போதையில் தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் சிக்குகின்றனர்.அதேபோல், போதை தலைக்கேறியதும், ஓடும் ரயில் மீது கல் வீசுகின்றனர். மாதத்துக்கு 10 கல்வீச்சு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்கிறோம். அதனால், ரயில் நிலையங்கள் அருகில் உள்ள, 40க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியலை அளித்து, அவற்றை இடம் மாற்றம் செய்யுமாறு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.