திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக, தி.மு.க., அரசு செயல்படுவதாக, ஹிந்து தமிழர் கட்சியின் நிறு வன தலைவர் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார் . அவரது அறிக்கை: கடந்த, 2024 டிசம்பர் 5ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில், ஆடு, கோழி பலியிட்டு, கந்துாரி கொடுக்க முயன்ற ஐந்து பேரை காவல் துறையினர் தடுத்தனர். இதை எதிர்த்து, அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிசம்பர், 31ல் திருமங்கலம் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு நடந்தது. அதில், இந்த பிரச்னைக்கு நீதிமன்றத்தில் தீர்வு காண்பது என, முடிவெடுக்கப்பட்டது. இந்தாண்டு ஜனவரி 16ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஹிந்து தமிழர் கட்சி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் சார்பில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி, வெட்டி பலியிட இருப்பதை தடுக்கக்கோரி, மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். ஆடு, கோழி பலியிட அனுமதி கோரி, தர்கா நிர்வாகத்தினரும் மனு அளித்தனர்.இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் மலையின் தொன்மை குறித்த ஆவணங்களை மற்றும் கோவில் பட்டர்கள், பரிசாகர்களின் கருத்துக்களை ஹிந்து சமய அறநிலையத்துறை சமர்ப்பித்துள்ளது. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை, கைலாய மலைக்கு இணையானது. சிவலிங்க வடிவமாக காட்சியளிக்கும் இந்த மலை, தெற்கு கைலாய மலை. மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகேயுள்ள சுனை, பாதாள கங்கை என்று, அழைக்கப்படுகிறது. போகர் என்ற சித்தர், இங்கு நீராடி சிவ வழிபாடு செய்தார்; மச்ச முனீஸ்வரர் என்ற சித்தர் சாப விமோசனம் பெற்ற சுனை தீர்த்தம் இது. இப்படிப்பட்ட புனிதமான மலையில் ஆடு, கோழிகளை பலியிடும் வழக்கம் இல்லை என்பதை, பெரியவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். அசைவ உணவு சாப்பிட்ட எலும்பு துண்டுகள், எச்சில் இலைகள் சுனையில் விழுந்தால், தீர்த்தத்தின் புனிதத் தன்மை கெடுவதோடு, பக்தர்களின் மனதும் புண்படும். அதனால் தான், மலை மீது உயிர் பலி கொடுக்க, இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை; அப்படி பலி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மலைக்கு கீழே உள்ள முஸ்லிம் பேட்டையில் தான், ஆடு பலி கொடுத்து, சமைத்து சாப்பிட்டுள்ளனர். புரட்டாசி மாதம் நடக்கும், 'மலை மேல் குமாரர்' திருவிழாவின் போது தங்க வேல் எடுத்துச் செல்லப்படும் பாதையில், மற்ற மதத்தினரும் செல்கின்றனர். இதனால், உயிர் பலி கொடுத்து, கந்துாரி நடத்துவதை அனுமதிக்க வேண்டாம் என்றும், உயர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பான பல நிதிமன்ற வழக்கு விபரங்கள், உத்தரவு நகல்களையும் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிடப்படுகிறது. ஜாதி, மதம், உணவு அடிப்படையில் பாகுபாடு கூடாது. சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளன. அழகர் கோவிலில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில், ஆடு, கோழி பலியிடப்படுகிறது. ஒருவரின் மத உரிமையில் மற்றொருவர் தலையிட முடியாது' என்று, கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர வேண்டும் என்பதற்காக, பெரும்பான்மை ஹிந்து மக்களின் நம்பிக்கை, வழிபாட்டு உரிமைக்கு எதிராக, 'சிக்கந்தர் மலை' என்பதற்கான ஆதாரங்கள் எனக்கூறி தாக்கல் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. மதுரை கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பருக்கு ஆடு, கோழி பலியிடப்படுகிறது என்ற பொருந்தா வாதத்தை, தமிழக அரசு முன்வைக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் ஹிந்து, முஸ்லிம், சமண மதத்தினர் வழிபாடு செய்வதற்க எந்த விதத்திலும் தடையில்லை என்பதை உணர்ந்தும், விஷயத்தை மடைமாற்றம் செய்ய, தமிழக அரசு முயற்சிக்கிறது . திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில், மலையடி கருப்பணசாமி பேச்சியம்மன், இருளப்பசாமி, அங்காளஈஸ்வரி, பத்ரகாளி என, பல கோவில்கள் உள்ளன. இங்கு ஹிந்துக்கள் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு ஆடு, கோழி பலியிட்டு, பிரியாணி சமைத்து சாப்பிட்டால், யாரும் எதிர்க்க போவதில்லை. சிக்கந்தர் தர்காவில், முஸ்லிம் மத தொழுகைக்கு எவ்வித தடையும் இல்லாத போது, அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழி வெட்டுகிறோம் என்று, தர்கா கமிட்டியினர் தான் பிரச்னையை உருவாக்கினர். எந்த மதத்தினரும் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் மரபு, மலையில் கிடையாது என்று, ஹிந்து சமய அறநிலைய துறையின் கோவில் நிர்வாகம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழக அரசும், மதுரை கலெக்டரும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இது, கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவை திரும்ப பெற வேண்டும் என்பதே, நல்லிணக்கத்தை விரும்பும் பலரின் விருப்பம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -