மிசோரம் - சென்னை புதிய ரயில் சேவைக்கு பரிந்துரை
சென்னை: மிசோரமில் இருந்து சென்னைக்கு புதிய ரயில் சேவை துவங்க, ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரம், இந்திய ரயில்வே உடன் முதல் முறையாக நேற்று இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாநில தலைநகர் அய்ஸ்வால் அருகில் உள்ள சாய்ராங்கில் இருந்து பைராபியை இணைக்கும் வகையில், மலையில், 8,071 கோடி ரூபாய் செலவில், 52 கி.மீ., ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதையை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இது, அம்மாநில மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு வழித்தடங்களிலும் ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய, ரயில்வே திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மிசோரம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, ஏராளமானோர் தமிழகம் வருகின்றனர். உயர் கல்வி படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ வசதி பெற அதிகளவில் வருகின்றனர். இதுவரை, மிசோரமில் ரயில் வசதி இல்லாமல் இருந்தது. தற்போது, புதிய ரயில் இணைப்பு வசதி கிடைத்துள்ளதால், அம்மாநில மக்கள் வசதிக்காக, சென்னைக்கு புதிய ரயில் சேவை துவங்க வேண்டும் என, ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து உள்ளோம். இதேபோல், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்து அசாம், மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு, சுற்றுலா பயணியர், தற்போது விமானத்தில் செல்கின்றனர். இதனால், சுற்றுலா செலவு அதிகமாக இருக்கிறது. புதிய ரயில் சேவை துவங்கினால், தென் மாநிலங்களில் இருந்து சுற்றுலா செல்லும் மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எங்களது பரிந்துரையை ரயில்வே வாரியம் ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.