உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல் உருவாவதில் தாமதம் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

புயல் உருவாவதில் தாமதம் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

சென்னை:வளிமண்டல அடுக்கு களில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு கடலோர மாவட்டங்களில், இன்று அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுஉள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது, சென்னைக்கு 480 கி.மீ., தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு 310 கி.மீ., தொலைவிலும் உள்ளது. இது, வடக்கு மற்றும் வட மேற்கில் இலங்கையின் கடலோரப் பகுதியை நோக்கி நகரும். அதன்பின், இந்த அமைப்பு மேலும் வடக்கு, வட மேற்கில் நகர்ந்து, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, நாளை காலையில் கரையை கடக்கக்கூடும். கரையை கடப்பதற்கு முன், இந்த அமைப்பு தற்காலிக புயலாக மாறி, சில மணி நேரங்களில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில், கடலில் மணிக்கு 75 முதல் 90 கி.மீ., வேகத்திலும், நிலப் பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். டிச., 4 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.

இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 21 செ.மீ.,க்கு மேல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளதுசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று, 12 செ.மீ.,க்கு மேல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளதுராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், 11 செ.மீ., வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதுராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கன மழையும், நாளை அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சூறாவளி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் சமயத்திலும், கரையை கடக்கும் சமயத்திலும், தமிழக கடலோரப் பகுதி களில் மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். அதே நேரத்தில், வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ., வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புயலாக மாறுவதில் இழுபறி ஏன்?

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான போது, அதில் காற்று குவிதல் மற்றும் விரிவடைதல் பாகங்கள் சீராக இருந்தன. கடந்த நவ., 26, 27ல் இந்த அமைப்பின் கீழ் அடுக்கில் காற்று குவிதல் குறைந்து, காற்று முறிவு ஏற்பட்டது. அதே நேரத்தில் மேலடுக்கில் காற்று விரிவடைதல் சீராகவே இருந்தது. இதனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டாலும், இந்த அமைப்பு வலுவிழக்காமல் நீடிக்க உதவியது. காற்று முறிவு காரணமாக இதன் நகர்வு வேகம் குறைந்ததால், நேற்றும், அதற்கு முந்தைய நாளும் தமிழகத்தில் மழை குறைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஒரு பகுதி, இலங்கையின் நிலப் பகுதியை தொட்டதும், இதன் வேகம் குறைய காரணமாக அமைந்தது. வளிமண்டல மேலடுக்கில் காணப்படும் சாதகமான சூழல் காரணமாக, இது மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை கரையை கடக்கும். அதற்கு முன், இது தற்காலிகமாக ஆரம்பகட்ட புயலாக மாறி வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி