உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்.. தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? அறிக்கை கோரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்.. தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? அறிக்கை கோரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் விழாக்கள், பூஜைகளுக்காக யானைகள் பராமரிக்கப்படுகின்றன. முதலில் ஆண் யானைகள் வளர்க்கப்பட்டன. அதன் வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட்டதால் மதம் பிடித்து சில அசம்பாவிதங்கள் நடந்தன. இதனால் பெண் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றிற்கு வனப்பகுதியில் 2003 முதல் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் 2021 ல் புத்துணர்வு முகாம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் நடத்தப்படவில்லை.யானைகள் வனத்தில் கூட்டமாக வாழக்கூடியவை. அவற்றை தனிமைப்படுத்தி காலில் சங்கிலியால் பிணைத்து அறைக்குள் அடைத்து வைப்பதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றன. 2018ல் சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினி பாகனை கொன்றதுடன் 2 பக்தர்களை காயப்படுத்தியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை 2020ல் பாகனை மிதித்தது. இதை தவிர்க்க புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது.இதில் யானைகளுக்கு சரிவிகித உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்கிறது. சக யானைகளை பார்ப்பது, பழகுவதால் மனரீதியான இறுக்கம் குறைகிறது. கோயில்களில் உள்ள மற்றும் பிற வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: அந்தந்த கோயில்களில் யானைகள் நீராட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புத்துணர்வு முகாமிற்கு வாகனங்களில் யானைகளை கொண்டு சென்று வருவதில் நடைமுறைச்சிரமங்கள் உள்ளன. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: இவ்விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், வனத்துறை முதன்மைச் செயலர் செப்.,9 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை