உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாதமாக ஊதியம் இல்லை பதிவுத்துறை ஒப்பந்த பணியாளர்கள் புகார்

6 மாதமாக ஊதியம் இல்லை பதிவுத்துறை ஒப்பந்த பணியாளர்கள் புகார்

சென்னை:சார் - பதிவாளர் அலுவலகங்களில் கணினி மற்றும் கேமரா ஆப்பரேட்டர்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து, ஆறு மாதங்களாக, ஊதியம் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 585 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் கணினி இயக்குதல், கேமராக்கள் இயக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காக மாதம் 8,000 ரூபாய் வரை ஊதியம் பேசப்பட்டது. இதற்கான செலவுத் தொகையை பதிவுத்துறை, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு கொடுத்து விடுகிறது. ஆனால், ஒப்பந்த நிறுவனங்கள், அந்தந்த மாதத்துக்கான ஊதியத்தை உரிய காலத்தில் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று புகார் எழுந்தபோது, ஒப்பந்த நிறுவனங்களை அழைத்து, அப்போது இருந்த ஐ.ஜி., பேசினர். இதையடுத்து ஒப்பந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கான நிலுவை ஊதியத்தை கொடுக்க முன்வந்தன. இதேபோன்று ஒப்பந்த நிறுவனங்களை அழைத்து பேசி, நிலுவை ஊதியம் கிடைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை